பதிவு செய்த நாள்
04
அக்
2014
02:10
ஈரோடு: புரட்டாசி மாத, 3வது சனிக்கிழமையை முன்னிட்டு, ஈரோடு, கோட்டை பெருமாள் கோவிலில், இன்று காலை, 8 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது. ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், புரட்டாசியின் முதல் இரண்டு சனிக்கிழமைகளில், சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினமும், அன்னபட்சி, சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருடசேவை, யானை வாகனம் என ஒவ்வொரு வாகனங்களில், சுவாமி அருள்பாலித்தார். இன்று, 3வது சனிக்கிழமையை முன்னிட்டு, தேரோட்டம் நடக்கிறது. இதற்காக, கடந்த சில நாட்களாக, தேர் பராமரிப்புப்பணி நடந்தது. தேர் அலங்கார வேலைகள் முடிக்கப்பட்டு, தேர் தயார் நிலையில் உள்ளது. இன்று காலை, 4 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், 7 மணிக்கு, ஸ்ரீதேவி,பூதேவி சமேத கஸ்தூரி அரங்கநாத சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல், 8.45 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. பின், செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் நடக்கிறது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மூலம், திருத்தேர், ஒரு கோடி ரூபாயிலும், பொதுமக்களுக்கு, 50 லட்சம் ரூபாயிலும் இன்சூரன்ஸ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, செயல் அலுவலர் விமலா தெரிவித்தார்.