பதிவு செய்த நாள்
06
அக்
2014
12:10
குமாரபாளையம் :முனியப்பன் கோவிலில் கோரிக்கை நிறைவேற, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு ஸ்வாமியை வழிபட்டனர். குமாரபாளையம்-சேலம் சாலையில், முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும், புரட்டாசி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, வேண்டுதல் நிறைவேற பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து, மண் சோறு சாப்பிடுவது வழக்கம்.இந்தாண்டு, புரட்டாசி மூன்றாம் ஞாயிறான நேற்று, மதியம் 1 மணிக்கு, முனியப்பன் ஸ்வாமிக்கு பாலாபிஷேகம் உள்பட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேற, மண் சோறு சாப்பிட்டனர்.மண்சோறு சாப்பிடும் பக்தர்கள், புரட்டாசி, 1ம் தேதி முதல் கையில் கங்கணம் கட்டிக் கொண்டு விரதம் இருந்து வந்தனர். திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, தொழில்மேன்மை, குடும்ப பிரச்னை தீரவும் இவ்வகையான பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர்.