பதிவு செய்த நாள்
09
அக்
2014
11:10
பழநி: சந்திரகிரகணத்தை முன்னிட்டு, நேற்று பழநி மலைக்கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தப்பட்டது. பழநி மலைக்கோயில் ஞான தண்டாயுதபாணி சுவாமி சன்னதி வழக்கம் போல் நேற்று காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம், விளாபூஜை, பகல் 12:00 மணிக்கு உச்சிகாலபூஜை நடைபெற்றது.
வழக்கமாக மாலை 5:30 க்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, நேற்று பகல் 1:30 க்கு நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், சந்திரகிரகணத்தை முன்னிட்டு பகல் 2:00 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மாலை 6:05 மணிக்கு கிரகணம் முடிந்த பின், கோயில் மூலஸ்தானம், உட்பிரகாரம் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு, சம்ப்ரோஷணப் பூஜைகள் நடந்தது. கிரகணம் காரணமாக, பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை 6:00 க்கு மேல் பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் மலைக்கோயிலை கிரிவலம் வந்து, ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தனர்.
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோயிலில் நேற்று அதிாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஸ்படிகலிங்க பூஜை, ஐந்து கால பூஜை நடைபெற்றது. பின், காலை 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து கிரகண சுவாமி புறப்பாடாகி, அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளியதும், கோயில் குருக்கள் கிரகண சுவாமி தீர்த்த வாரி நிகழ்ச்சி, மகா தீபாராதனை செய்தனர். பின், சந்திர கிரகணம் முடிந்ததும் மாலை 6:30க்கு, கோயில் நடை திறக்கப்பட்டது. பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் புனித நீர் ஊற்றி சுத்தம் செய்தவுடன், பூஜைகள் நடைபெற்றதும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.