பதிவு செய்த நாள்
23
அக்
2014
12:10
பழநி: பழநியில் கந்தசஷ்டிவிழா நாளை மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்குகிறது. அக்.,29 ல் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்குமேல் கோயில் நடை சாத்தப்படவுள்ளது.
பழநிமலைக்கோயிலில் உச்சிகாலம் பகல் 12 மணிக்கு காப்புகட்டுதலுடன் கந்தசஷ்டி விழா துவங்கி அக்.,30 வரை நடக்கிறது. அக்.,29 ல் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தைமுன்னிட்டு, அன்று அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனமும், அதிகாலை 4.30 மணிக்கு விளா பூஜை, படையல் நைவேத்தியம் நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு நடக்கவேண்டிய, சாயரட்சை பூஜை பகல் 1.30 மணிக்கு நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு சின்னக்குமாரசுவாமி, அசுரர்களை வதம்புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன், சன்னதி நடை சாத்தப்படுவதால் இரவு 7 மணிக்கு தங்க ரதப்புறப்பாடு கிடையாது. பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துகுமாரசுவாமி, வள்ளிதேவசேனாவுடன் மயில் வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.அசுரர்கள் வதம்: திருஆவினன் குடியில், பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல், வடக்குகிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்குகிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்குகிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மலைக்கோயிலுக்கு புறப்பாடாகி சம்ப்ரோட்சனம் பூஜைக்கு பின் அர்த்தஜாமம் பூஜை நடக்கிறது.திருக்கல்யாணம்: அக்., 30ல் மலைக்கோயிலில் காலை 10 மணிக்குமேல் 11 மணிக்குள் வள்ளி தேவசேனா உடனான சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 7 மணிக்குமேல் 8 மணிக்குள் முத்துக் குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பழநிகோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.