பதிவு செய்த நாள்
23
அக்
2014
12:10
கிராமப்புற கோவில்களின் திருப்பணிக்காக, அதிக வருமானம் வரும் கோவில்களின் பணத்தை பயன்படுத்துவது, கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபையில், இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, 2014 15ல், கிராமப்புறங்களில் உள்ள, 1,006 கோவில்களுக்கு, திருப்பணி செய்ய, கோவில் ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வீதம், 5.03 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இத்தொகையில், 4.48 கோடி ரூபாயை, நிதிவசதி மிக்க கோவில்களின் உபரி நிதியில் இருந்து, சட்டப்பிரிவு, 36ன் கீழ், நிதிமாற்றம் மூலம், நிதி ஒதுக்கீடு செய்து செலவிட, அரசாணை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் ஆகியவற்றில் இருந்து, தலா ஒரு கோடி ரூபாய், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து, 48.75 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, குறிப்பிட்ட தொகையை, வரைவோலை மூலம், துறை கமிஷனருக்கு அனுப்பி வைக்கவும்.
இத்தொகையை உடனடியாக அனுப்பி விட்டு, பின், உட்பிரிவு 36ன் கீழ், நீதிமன்றம் அனுமதித்த, அறங்காவலர் குழு தீர்மானம் பெற்று, தனியே உரிய முறையில் விண்ணப்பித்து, அனுமதி பெற்றுக் கொள்ளவும். இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமானம் அதிகம் உள்ள கோவில் பணத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக, வேறு திட்டத்திற்கு மாற்றுவது, சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் பக்தர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. விதிகளுக்கு புறம்பாக, நிதி மாற்றம் செய்யப்படுகிறது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து, துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஒரு கோவிலில், உபரி நிதி இருந்தால், அந்த நிதியை, சமூக நல திட்டங்களுக்கு செயல்படுத்த பயன்படுத்த வேண்டும் என, விதி உள்ளது.
இதன் அடிப்படையில், கோவில் சார்பில், மருத்துவமனை, கல்லூரி, பள்ளிகள் துவக்கப்பட்டன. அதனால், பொதுமக்கள் பயனடைந்து வந்தனர். உபரி நிதியை எதற்கு பயன்படுத்துவது என்பதை, அறங்காவலர் குழு தான் தீர்மானிக்க வேண்டும். தற்போது, அறங்காவலர் குழு நியமிக்கப்படாமல், அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவெடுக்கின்றனர். உபரி நிதியை, பிற கோவில் திருப்பணிக்கு வழங்குவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட கோவில்கள் சார்பில், உபரி வருமானம் உள்ள கோவிலுக்கு, விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். அதை பரிசீலித்து, தேவையான கோவில்களை தேர்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
ஆனால், அதிகாரிகள், கோவில்களில் இருந்து, குறிப்பிட்ட தொகையை தர வேண்டும் என, கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர். அதன்பின் அந்தத் தொகையை, தாங்கள் விருப்பப்படும் கோவில்களுக்கு வழங்குகின்றனர். இதில் முறைகேடு நடப்பதாகவும் கூறப்படுகிறது.
எந்தெந்த கோவில்களில் இருந்து, திருப்பணிக்கு உதவி கேட்டு விண்ணப்பம் வந்துள்ளது என்ற விவரத்தை வெளியிட்டு, இது தொடர்பாக, மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்.
இவையெல்லாம் பின்பற்றப்படுவதில்லை. கிராமப்புற கோவில்கள் திருப்பணிக்கு, அங்குள்ள மக்களிடமே நிதி திரட்ட முடியும். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் கோவிலை பராமரிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். தற்போது, அரசு நிதி ஒதுக்கும் எனக்கூறி, கோவில்களை பராமரிக்கும் பணியை, மக்கள் கைவிட்டு வருகின்றனர். இது தேவையற்றது.
அதிக வருமானம் வரும் கோவில்களில் இருந்து, இதுபோன்று நிதி எடுக்காமல் இருந்தால், அந்த கோவில் சார்பில், திருப்பதி தேவஸ்தானம் போல், பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும். எனவே, கிராமப்புற கோவில் திருப்ப ணிக்கு, அரசு நிதி ஒதுக்க வேண்டும் அல்லது நன்கொடையாளர்களிடம் நிதி திரட்ட வேண்டும். அதற்கு பதிலாக, வருமானம் அதிகம் உள்ள கோவில்களில் இருந்து, பணம் வாங்கும் முறையை, கைவிட வேண்டும். இவ்வாறு, அவர்கள்தெரிவித்தனர்.