பதிவு செய்த நாள்
24
அக்
2014
11:10
கிணத்துக்கடவு: வடசித்துார் கிராமவாசிகள், மயிலந்தீபாவளியை, நேற்று கொண்டாடினர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி, வடசித்துார் கிராமத்தில், பல தலைமுறைகளாக, தீபாவளிக்கு மறுநாள், புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, வாண வேடிக்கையுடன், ’மயிலந் தீபாவளி’ கொண்டாடி வருகின்றனர். இதற்கு, உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. இக்கிராமத்தில் இருந்து, திருமணமாகி சென்ற பெண்கள், புகுந்த வீட்டில் தீபாவளியை முடித்து, தாய் வீட்டில் நடக்கும், மயிலந்தீபாவளிக்கு, விருந்தினராக வருவது தான் இதன் சிறப்பு. வடசித்துார் கிராமவாசிகள், நண்பர்கள், உறவினர் என, ஏராளமானோர் கூடியதால், மயிலந் தீபாவளி களைகட்டியது. பகல், 1:00 மணிக்கு, ஒவ்வொருவரின் வீட்டிலும், கிடா விருந்து வைக்கப்பட்டது. இதில், முஸ்லிம்களும் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு, ஊராட்சி மன்ற அலுவலகம் முன், மைதானத்தில் கூடி, ராட்டினத்தில் விளையாடி மகிழ்ந்தனர்.