பதிவு செய்த நாள்
24
அக்
2014
12:10
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவத்தை துவங்கி நள்ளிரவு ஒரு மணி வரை நடந்தது.
ஊஞ்சல் மண்டபத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும், கோவில் பூசாரிகளும், பக்தர்களும் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதில் தென்சென்னை எம்.பி., விஜயகுமார், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அனுசுயா தேவி, செஞ்சி மாஜிஸ்ட்ரேட் வரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்து சமாய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் தஞ்சாவூர் குமரதுரை, மதுரை மீனாட்சியம்மன் கோவில் நடராஜன், மேல்மலையனூர் கோவில் உதவி ஆணையர் பிரகாஷ், அறங்காவலர் தலைவர் சரவணன் மற்றும் அறங்காவலர்கள், விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழுப்புரம் எஸ்.பி., விக்கரமன் தலைமையில் செஞ்சி டி.எஸ்.பி., முரளிதரன் உட்பட 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.