சபரிமலை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் எதிர்பார்ப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2014 01:10
மதுரை: சபரிமலை சீசன் துவங்கவுள்ள நிலையில், மதுரை வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய மீனாட்சி கோயில் நிர்வாகம், மாநகராட்சி, போலீஸ் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் நவ., முதல் ஜன., வரை வெளியூர் சபரிமலை பக்தர்கள் மதுரைக்கு வாகனங்களில் வருகின்றனர். பார்க்கிங் பிரச்னை பெரிய குறையாக உள்ளது. இதை கருத்திற்கொண்டு, எல்லீஸ்நகர் ரோட்டில் மீனாட்சி கோயில் சார்பில் கட்டண பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வழியாக கோயில் வரை அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் இருக்க பைபாஸ் ரோடு, எல்லீஸ்நகர் ரோட்டில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. கழிப்பறை, தண்ணீர் வசதிகள் இல்லாததால் இருரோடுகளையும் நாறடிக்கின்றனர்.இதை தவிர்க்க குறிப்பிட்ட இடங்களில் அடிப்படை வசதிகளுடன் பார்க்கிங் வசதி செய்துதரவேண்டும். ஷேர் ஆட்டோக்கள் சுற்றுலா வாகனங்களை முற்றுகையிட்டு கட்டாயப்படுத்தி ஏற்றுகின்றனர். கட்டணம் தொடர்பாக தகராறும் ஏற்படுகிறது. இதைதவிர்க்க, ஆட்டோக்களுக்கு தனி ஸ்டாண்ட் அமைத்து, வரிசையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.போக்குவரத்துக்கு இடையூறின்றி பிளாட்பாரங்களை பக்தர்கள் பயன்படுத்த நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு முதல் கோயில் வரை இருபுறமும் உள்ள பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.சுகாதாரத்திற்கு மாநகராட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கோயில் நிர்வாகம், மாநகராட்சி, போலீசார் இணைந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர இப்போதே ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.