பதிவு செய்த நாள்
03
நவ
2014
12:11
திருச்சி: ""ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் திருப்பணிக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், எட்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என ஆணையர் தனபால், தெரிவித்தார். திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் பணிக்காக, அரசு நிதி மற்றும் தனியார் நன்கொடை மூலமாக, 10.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் செங்கல் சுவர்கள் அகற்றப்பட்டு, தரைத்தளத்தில் கான்கிரீட் பெயர்த்து எடுத்து, பட்டியக்கல் பொருத்தும் பணிகள், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் வண்ணம் தீட்டுதல், உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திருப்பணிகளை ஆய்வு செய்ய, நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால் கூறியதாவது, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் திருப்பணிகள் ஜனவரி மாதத்திற்குள் முடித்து, ஏற்கனவே அறிவித்தபடி மார்ச் மாத இறுதியில், கும்பாபிஷேகம் நடைபெறும். திருப்பணிகளின் ஒரு பகுதியாக, செங்கல் சுவர்கள் அகற்றி, தரைத்தளத்தில் கான்கிரீட், மண் அகற்றும் பணிகளும், கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
கோவிலில் நாழிக்கோட்டான் வாசலில், தற்போது பித்தளை படிக்கட்டுகள் உள்ளன. இவற்றை அகற்றிவிட்டு, வெண்கலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்படும். மூலஸ்தானத்தில் உள்ள வெள்ளிக்கதவுகள் புதுப்பிக்கப்படும். சூரிய புஷ்கரணியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும். உடையவர் சன்னதி, பார்த்தசாரதி சன்னதி இடையே கோவில் யானை தங்குவதற்கான யானை கூடம் அமைக்கப்படும். சக்கரத்தாழ்வார் சன்னதி, அன்னதானக்கூடம் அருகே நந்தவனம் அமைக்கப்படும். கோவிலின் திருப்பணிகள் செய்வதற்கு ஏதுவாக, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கூடுதலாக எட்டுக்கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும், என்று அவர் கூறினார்.