பதிவு செய்த நாள்
03
நவ
2014
02:11
கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார் என்பது உண்மையானால் எப்போதும் கடவுளுடனே இருக்கிறோம் என்பதும், அவர் அறிய இருக்கும் நாம் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்என்பதும் தெளிவாகிறது.நமக்குத் தான் எல்லாம் தெரியும் என்றும், மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்றும்எண்ணுவது கூடாது. கற்றது கை மண்ணளவு; கல்லாதது உலகளவு என்னும் உண்மையை உணர்ந்து அடக்கமுடன் நடக்க வேண்டும். கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ்வதை விட, எளிமையுடன் சிக்கனத்தைக் கடைபிடிப்பது நல்லது. கடன் பட்டு உண்ணும் பால் அன்னத்தை விட கடன் இல்லாமல் கஞ்சி குடிப்பதே நல்லது. மரணம் எப்போது யாருக்கு வரும் என்பதுதெரியாது. அதனால் வாழும் காலத்திற்குள் நல்லதைச் செய்து நற்கதிக்கு வழி தேட வேண்டும். கடவுள் இல்லை என்று வாதிடுபவனுக்குஎதுவும் இல்லாமலே போய் விடும். கடவுள் உண்டு என்று நம்புபவனுக்கு எல்லா நன்மையும் உண்டாகும். ஒழுங்கீனமான வார்த்தைகளைப் பேசவும், புகை பிடிக்கவும், மது அருந்தவும் தான் மனிதன் வெட்கப்பட வேண்டுமே ஒழிய நெற்றியில்திருநீறு பூச யாரும் வெட்கப்படக் கூடாது.நாம் நினைக்கும் ரகசியமான எண்ணங்களையும் கடவுள் நன்கு அறிவார். அவர் அறியாத ரகசியம் என்று உலகில் இல்லவே இல்லை. ஆபத்து, நோய், துன்பம் போன்றவை நம்மிடம் வராமல் தடுக்க வேண்டுமானால், தர்ம சிந்தனையுடன் நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.எதைச் செய்தாலும் தனக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என கருதுவது சுயநலம். நமக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் பயன் தரும் செயல்களில் மனிதன் ஈடுபட வேண்டும். நம்மைக் கெடுப்பதும், வாழ வைப்பதும் நம் எண்ணங்களே. நல்ல எண்ணத்தால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் நன்மை பெறுகிறார்கள்.சவுக்குமரம் சிறிது நேரம் எரிந்தாலும் கொழுந்து விட்டெரியும். உமி நாள் முழுக்க எரிந்தாலும் புகைந்து கொண்டு தானிருக்கும். அதுபோல, சில காலம் வாழ்ந்தாலும் புகழோடு வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை.செல்வம் படைத்தவன் என்பதற்காக ஆணவத்துடன் நடந்து கொள்வது கூடாது. அவரவர் செய்த பாவ, புண்ணியமே ஒருவர் மறைந்த பின்னும் கூட வரப்போகிறது.ஏழைக்கு அன்னம் அளிக்கும் இல்லத்தில் உண்டு மகிழ்வதற்காக இறைவனும் ஏழையோடு ஏழையாக வந்து உண்பார். நம்மிடம் பணம் சேரச் சேர சாப்பாடு, துõக்கம், ஒழுக்கம், நிம்மதி, பக்தி என எல்லா நல்ல விஷயங்களும் குறையத் தொடங்கும். பணத்தால் நிலை மாறினாலும் குணம் மாறக்கூடாது.நாம் உழைத்து வாழ்வது நமது முன்னேற்றத்திற்காகவே. ஆனால், ஞானிகள் உலக நன்மைக்காக வாழ்வையே அர்ப்பணிக்கிறார்கள். வெயில் அதிகமாகும் போது அதைத் தணிப்பதற்காக மழை வரும். அதுபோல, அநீதி அதிகமாகும் போது தர்மத்தை நிலைநாட்ட மகான்கள் அவதரிக்கிறார்கள். நல்லவர்களின் கோபம் மோதிரம் கழற்றுவதற்குள் மறைந்து விடும். ஆனால், பாமரர்கள் வாழ்நாள் முழுவதும் கோபத்தை மறந்து விடாமல் இருக்கவே முயல்கிறார்கள்.மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் வாழ்வில் லட்சியம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் மிருக நிலைக்கு தாழ்ந்து விடுவோம்.மாடு அசை போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அதுபோல, மனிதனும் தான் கேட்ட நல்ல விஷயங்களை மறந்து விடாமல், நிதானமாக சிந்தித்து பின்பற்றி நடக்க வேண்டும்.
மகான் வாரியார்!