Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » மவுன நிர்வாண சுவாமிகள்
கசவனம்பட்டி மவுன நிர்வாண சுவாமிகள்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 நவ
2014
05:11

மகான்களின் அவதாரங்கள் மட்டும் இந்தியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்காவிட்டால்,  இந்தியா இந்த அளவுக்குப் புனிதமும் புகழும் பெற்றிருக்குமோ என்பது சந்தேகம் என்று காஞ்சி மகா ஸ்வாமிகளைச் சந்தித்த பின் தன் நாட்டுக்குச் சென்ற ஒரு வெள்ளைக்காரர். அங்கே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பகிரங்கமாகச் சொன்னார். இந்தியத் திருநாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுமே பெருமைப்பட்ட வேண்டிய விஷயம் இது.  வள்ளலார் அவரித்த வடலூரில் வசிப்பார்கள் பாக்கியசாலிகள்! கருணைத் தெய்வமான மகா பெரியவா அருளாட்சி செய்த காஞ்சியில் காலத்தைக் கழிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.  எளியவனாக இருந்து ஏழ்மையை விரட்டுவதற்கு அவதாரம் செய்த பாபாவின் புண்ணிய பூமியான ஷீரடியை மிதிப்பவர்கள் யோகக்காரர்கள்.

எத்தனையோ மகான்களின் திருவடி பட்ட தேச மண்ணில் தினம் தினம் நாம் நடந்து கொண்டிருக்கின்றோம்.  ஆம்! இந்தியத் திருநாட்டில் மலைகளில் மட்டும் மகான்களின் வசிக்கவில்லை.  மனிதர்களோடு மனிதர்களாக நடமாடி, மகத்துவம் புரிந்தவர்கள்.  இல்லறவாசிகளுக்கு நல்லறம் அருளினார்கள்.  எத்தனையோ பேரின் துக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.சாபங்களை சுவீகரித்துக் கொண்டார்கள்.  வரங்களை வழங்கினார்கள்.  ஆக மொத்தத்தில், மகான்களின் திரு அவதாரங்கள் எல்லாமே இந்த மண்ணை செழிப்பாக்க வந்தவை; மனிதர்களை நெறிப்படி வாழ வைக்க வந்தவை.

அதுபோல் வந்த ஒரு புனித ஆத்மாதான்-கசவனம்பட்டி ஸ்ரீஜோதி மவுன நிர்வாண சுவாமிகள்.  இவரது காலத்தில் தமிழகத்தில் இருந்த மகான்கள், தங்களைச் சந்திக்க வரும் பக்தர்களைக் கசவனம்பட்டிக்குத் திருப்பி விட்டார்கள்.  மனிதர்களில்தான் மற்றவர்களை அறிவதற்கு சந்தர்ப்பம் தேவை.  ஒரு மகான், மற்றொரு மகானை அறிவதற்கு சந்தர்ப்பம் தேவை இல்லை.  இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஞான திருஷ்டியால் உணர்ந்தார்கள்.  திருவண்ணாமலை யோகி ராம் சுரத்குமார் தான் ஒரு அலை என்றால், கசவனம்பட்டி சுவாமிகள் ஒரு கடல் என்றார்.  தன்னைச் சந்திக்க வந்த பக்தர்களிடம்.  திருக்கோவிலுர் தபோவனத்தில் தன்னாட்சி நடத்தி வரும் ஞானாந்தகிரி சுவாமிகள், கசவனம்பட்டி சுவாமிகள் ஒரு ஆன்மிக ஜோதி என்று ஆரூடம் சொன்னார். பொள்ளாச்சியில் புரவிபாளையம் ஜமீன் பங்களாவில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே முப்பது வருடங்களுக்கும் மேலாக முன்வினைகளை அறுத்த கோடி சுவாமிகள்.  மகான்களுக்கெல்லாம் மகான் என்று கசவனம்பட்டி சுவாமிகளுக்குப் புகழாரம் சூட்டினார். இதெல்லாம் ஒரு சின்ன முன்னுரைதான்.

திண்டுக்கலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவு.  பழநி-மதுரை சாலையில் உள்ள கன்னிவாடியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவு. திண்டுக்கல் -பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் கசவனம்பட்டி இருக்கிறது. கசவனம்பட்டி என்பது ஒரு சிறு கிராமம்.  ஆனால் ஸ்ரீஜோதி மவுன நிர்வாண சுவாமிகளால், இந்தக் கிராமம் பலருக்கும் தெரிந்திருக்கிறது.  தனது துறவு வாழ்க்கைக்குக் கசவனம்பட்டியைத் தேர்ந்தெடுத்து இங்கே வந்து அமர்ந்து அருளாட்சி நடத்தினர் மவுன நிர்வாண சுவாமிகள்.

ஆசிரம வாழ்க்கையை அவர் தேர்ந்தெடுத்ததற்கு எந்த ஆதாரமும் அறியப்படவில்லை. தேஜஸான முகம் இல்லை; ஆனால், வெளிநாட்டில் இருந்தும் பலர் இவரைத் தேடி வந்தார்கள். தியானம் இல்லை; ஆனால், இவரிடம் தீட்சை பெற்றவர்களின் எண்ணிக்கை கணக்கில் இல்லை. ஜடாமுடியோ, நீண்டு வளர்ந்த தாடியோ அவரது தேகத்தில் இல்லை; ஆனால், இவரால் முடியாதது ஒன்றும் இல்லை என்று தீர்மானித்து சாமீ....சாமீ என்று இவரையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். நெற்றியில் திருநீறு இல்லை; ஆனால், நிலத்தில் இவரது பாதங்கள் படிந்த இடத்தைத் தொட்டுத் தங்கள் கண்களில் ஒற்றிக்கொண்டார்கள் அதையே திருநீறாக பாவித்து இட்டுக் கொண்டார்கள். உடலில் ஒட்டுத் துணி இல்லை; ஆனால், பார்கின்ற எவரது முகத்திலும் அருவருப்பு இல்லை.  பயணம் போனதில்லை; வழிபாடு நடத்தியதில்லை; யோகாப்பியாசம் செய்தில்லை; புராணங்களைப் படிக்கவில்லை;  இரு கைககளையும் உயரே தூக்கி ஆசிர்வதித்ததில்லை.

சுவாமிகளிடம் ஆசி வாங்க எவர் வந்தாலும் அவரிடம் இருந்து அடி உதைதான் கிடைக்கும்.  அடிப்பது என்பது அவமானப்படுத்த அல்ல, அரவணைத்து ஆட்கொள்வதற்கு! உதைப்பது என்பது உதாசீனப்படுத்துவதற்கு அல்ல.  உன்மத்தனாக மாற்றுவதற்கு. கசவனம்பட்டியில் உள்ள தெருக்கள், சுவாமிகளின் நிரந்தர முகவரி ஆனது.  அந்த ஊர்க்காரர்கள் அவரது பக்தர்கள் ஆனார்கள். முதல் முதலாக உடலில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் கசவனம்பட்டிக்கு ஒரு பாலகனாக வந்தபோது அருவருப்புடன் பார்த்து அங்கலாய்த்தார்கள்.  கசவனம்பட்டிக்குக் கிழக்கே குட்டத்து ஆவரம்பட்டிக்கரட்டில் பச்சை இலைகளை மட்டுமே உண்டு திரிபவராக அந்த ஊர்க்காரர்களுக்கு அறிமுகம் ஆனார் சுவாமிகள்.  பிறப்பு எங்கே? வளர்ப்பு எங்கே?  பிறப்புக்கும் வளர்ப்புக்கும் ஆதாரமானவர்கள் யார்? யாருக்கும் எதுவும் தெரியாது. சுவாமிகள் உலவும் இடத்துக்கு விவசாயம் செய்வதற்கு செல்லும் கசவனம்பட்டி ஆசாமிகள் சிலர், ஒரு கட்டத்தில் சுவாமிகள் மேல் பரிதாபம் கொண்டு, உண்ண உணவு கொடுத்தார்கள்; உண்டார், உடுத்த உடை கொடுத்தார்கள்; உதறி தள்ளினார்.  புரிந்து கொண்டார்கள்-இவர் சாதராண பிறவி இல்லை என்று.  பயபக்தியுன் அவரிடம் பேசித் தங்கள் ஊருக்கே அழைத்து வருவார்கள்.  விவரம் அறியாதவர்களும் வேலைவெட்டி இல்லாதவர்களும் சுவாமிகளிடம் விளையாடிப் பார்த்ததும் உண்டு. சுவாமிகள் மேல் எடுத்து வீசுவார்கள்.  வேண்டும் என்றே ஒரு துணியை சுவாமிகளின் மேல் போர்த்துவார்கள், சுவாமிகளிடம் ஏதாவது பேச்சுக் கொடுத்து, அவரைப் பேச வைக்க முயல்வார்கள்.

அந்த ஊரில் சாமியார் போல் இருந்த ஒருவருக்கு, கசவனம்பட்டி சுவாமிகளைக் கண்டாலே ஆகாது.  இவன் என்ன.... பேசாமலே இருக்கிறான்?  இவன் ஊமையா?  இவனை நான் பேச வைக்கிறேன் என்று ஊர்மக்களிடம் சபதம் போட்டு விட்டு, அங்குள்ள விநாயகர் கோயிலில் இரவு வேளையில் பாலகனாக இருந்த சுவாமிகளைப் பிடித்து அடைத்து வைத்தார்.  சுவாமிகளின் அருளுக்கு அதுவரை பாத்திரமான பொதுமக்கள் சிலர் பதறினர்.  வேண்டாம் இந்த விளையாட்டுஎன்று அந்த சாமியரை எச்சரித்தனர்.  பயப்படாதீர்கள்.  அடைத்து வைத்த பயத்தில் விடிந்ததும் அவன் பேச ஆரம்பித்து விடுவான் என்றார்.  விடிந்தது. விநாயகர் கோயிலைத் திறந்து பார்த்தால்.  அங்கே சுவாமிகளைக் காணவில்லை.  ஊர்க்கோடியில் எங்கோ அமர்ந்திருந்தாரம்.  சுவாமிகளைப் பற்றி ஊர்க்காரர்கள் முழுமையாக அறிந்து கொள்வதற்கு நடந்த திருவிளையாடல் இது.  அந்த சாமியாருக்கு அதன் பின் வாழ்வில் விடியல் இல்லை.  அவரது வாழ்வு சின்னாபின்னமாகிப் போனதாம்.  தன் வாழ்நாளில் சுவாமிகள் எப்போதாவது ஓரிரு வார்த்தைகள்தான் பேசி இருக்கிறார்.  மற்றபடி எல்லாமே சைகையும் பார்வையும்தான்!

தெருக்களில்தான் வாசம் செய்யும் இந்த திகம்பரசாமி, திடீரென காணாமல் போய் விடுவார்.  எவராலும் கண்டுபிடிக்க முடியாது.  பிறகு, எவரோ கொடுத்த குறிப்பை வைத்துத் தேடிப் போய்த் தங்கள் தோள்களில் தூக்கி வைத்தவண்ணம் ஊருக்கே அழைத்து வருவார்கள் இந்த மகானை.  இரவு வேளைகளில் கசவனம்பட்டியில் உள்ள முத்தாலம்மன் கோயில் மூல ஸ்தானத்தில் துயில் புரிவார்.  இதற்கென்று அங்கே ஒரு கட்டிலை நிரந்த ரமாக வைத்தார்கள் ஊர்க்காரர்கள்.  பெரும் பேறு பெற்ற அந்தக் கட்டிலை இன்றைக்கும் பக்தர்கள் தரிசித்துப் பரவசம் கொள்கிறார்கள். தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தரும் சிகரெட் மற்றும் பீடியை வாங்கி ஊதித் தள்ளுவார்.  இது சுகம் அனுபவிப்பதற்காக  அல்ல.  பக்தர்களின் பாவங்களைப் புகையாக வெளியிட்டு, அவர்களை புண்ணிய ஆத்மாக்களாகப் மாற்றுவதற்கு.  சிகரெட்டின் சாம்பலையே விபூதிப் பிரசாதமாக நெற்றியில் இட்டு விடுவார்.  சுவாமிகளின் இந்த சிகரெட் சாம்பலைத் தங்கள் வீட்டு விபூதியுடன் கலந்து வைத்து, தினமும் அதை இட்டுக் கொண்டு அன்றாட அலுவல்களை ஆரம்பித்த ஆசாமிகள் நிறைய பேர் திண்டுக்கல் பகுதியில் இன்றைக்கும் வசித்து வருகிறார்கள்.

கேரள தேசத்தில் இருந்து ஒரு மந்திரவாதி தமிழகம் வந்து ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான்.  பில்லி, சூன்யம் வைப்பதில் கைதேர்ந்தவன்.  மாய வேலைகள் செய்து மக்களை மயக்கித் தன்வயப்படுத்தி வந்தான்.  ஞான மார்கத்தில் தன்னை மிஞ்சி எவருமே இல்லை என்ற அகம்பாவம் கொண்டிருந்தான்.  விதி, அவனைக் கசவனம்பட்டிக்கு விரட்டியது.  கசவனம்பட்டி சுவாமிகளைப் பற்றி ஊர்மக்கள் ஆகா, ஓகோவென்று பேசிக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு.  என்னை விட அவன் பெரிய ஆளா? நான் என்ன செய்கிறேன் பார் என்று ஊராரிடம் சவால் விட்டான். அப்போது சுவாமிகள் இருந்த முத்தாலம்மன் கோயில் வாசலுக்கு வந்தார்.  கோயில் வாசலில் ஊர்க்காரர்கள் கூடினர்.  சுவாமிகளின் காதில் விழும்படியாக, நான்தான் இந்த உலகிலேயே பெரிய ஞானி.  எனது அறிவுத் திறனுடன் போட்டி போட எவரும் இங்கே பிறக்கவில்லை. இங்கே கசவணம்பட்டி சுவாமிகள் என்றொரு ஆசாமி இருப்பதாகச் சொல்கிறார்கள்.  ஞானத்தில் சிறந்தவர் அவரா, நானா என்பதை உங்கள் முன் நிரூபித்துக் காட்டப் போகிறேன் என்று பிதற்றினான். நம் சுவாமிகளையே சவாலுக்கு அழைக்கிறானா என்று ஊர்மக்கள் சிலிர்த்தனர்.

அந்த வேளையில் விரல்களுக்கிடையே புகையும் சிகரெட்டுடன் சுவாமிகளே அமைதியாக வெளியே வந்தார். மந்திரவாதி கூவிக் கொண்டிருந்த இடம் அருகே சென்றார்.  தனது திருக்கரத்தால் அவனது மார்பை வருடுவது போல் மெள்ளத் தடவினார். அவ்வளவுதான்! அடுத்த நொடியே ஐயோ.....அம்மா....... உடலெல்லாம் குத்துதே .... குடையுதே என்று புலம்ப ஆரம்பித்தவனின் கை, கால்கள் வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பித்து விட்டன.  பிறகு, ஊர்மக்கள் சுவாமிகளிடம் வந்து கேட்டுக்கொண்டதனின்படி, புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டின் சாம்பலை அந்த மாந்திரவாதயின் கையில் போட்டார்.  அதுவரை சுவாமிகளின் சக்தி பற்றி ஓரளவு அறிந்திருந்த அவன், அதைத் தன் நெற்றியில் பக்தியுடன் இட்டுக்கொண்டான். என்ன ஆச்சரியம்..... அடுத்த விநாடியே அவன் இயல்பு நிலைக்கு வந்தான்.  சுவாமிகளின் திருப்பாதங்களில் மண்டியிட்டுக் தொழுது விட்டு, ஓடியே போனான்.

சுவாமிகளின் தன் பக்தர்களுத் தீட்சை தரும் முறையே வித்தியாசமானது.  தீட்சை பெற விரும்பும் அன்பர்களைத் தன் இரண்டு கால்களாலும் எட்டி உதைப்பார்.  இப்படி அவரிடம் தீட்சை வாங்கிய அன்பார்கள் வாழ்கையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.  சிங்கம்புணரி புலவர் பாண்டியன் என்பவர் இதே போல் சுவாமிகளிடம் தீட்சை வாங்கி உள்ளார்.  சுவாமிகளிடம் தீட்சை வாங்குவதற்குப் பல பக்தர்கள் காத்திருப்பார்களாம்.  ஆனால், எல்லோருக்கும் தீட்சை கொடுத்துவிட மாட்டார்.  தனக்குத் தோன்றும் பக்தர்களுக்கு மட்டுமே தீட்சை வழங்குவாராம். சுவாமிகளை 1939-ஆம் ஆண்டில் இருந்தே தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் இருளப்பத்தேவர்.  இவர் கசவணம்பட்டியிலேயே ஒரு பள்ளியை ஆரம்பித்து நடத்தியவர்.  வகுப்பில் இவர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் வேளைகளில், சுவாமிகள் திடீரென வகுப்புகள் நுழைந்து ஓரமாக ஏதாவது ஒரு பெஞ்சிலே உட்கார்ந்து கொள்வார்.  அவரைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால், இருளப்பத்தேவர் தன் பணியைத் தொடர்வார்.

ஒரு முறை இந்தப் பள்ளியை ஆய்வு செய்ய அரசுத் தரப்பில் இருந்து கிருஷ்ணராவ் என்கிற ஆய்வாளர் வந்திருந்தார்.  ஆய்வாளர் பள்ளிக்குள் நுழையும்போதே பின்னாலேயே சுவாமிகளும் நுழைந்து வழக்கம் போல் காலியாகக் கிடக்கும் ஒரு பெஞ்சில் அமர்ந்தார்.  கிருஷ்ணராவ் கடுப்பானார்.  யார் இவர்? வகுப்புக்குள் நுழைந்து அமர்கிறார்? உடலில் ஒட்டுத் துணிகூட இல்லாத இந்த ஆளை உடனே வெளியே அனுப்பு என்றார் இருளப்பத்தேவரிடம்.  அவருக்கோ தர்மசங்கடம்.  இவர் ஒரு சுவாமிகள்.  இவர் இருப்பதால் உங்களது பணிக்கு இடையூறு இருக்காது என்று சொல்ல ஆய்வாளர் கிருஷ்ணராவ் கடுப்பானார்.  வகுப்பில் நான் ஆய்வு செய்ய வேண்டுமா?  அவர் இருக்க வேண்டுமோ என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி வகுப்பை விட்டு வெளியேறிப் போய் விட்டார். இருளப்பத்தேவர் தவித்துப் போனார்.  தனக்கும் தன் பள்ளிக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ என்று கலங்கினார்.  ஆனால், அன்று தான் ஆய்வு செய்ய வேண்டிய பள்ளிப் பணிகளை முடிந்து விட்டு இரவில் கிருஷ்ணராவ் தருமத்துப்பட்டியில் தங்கி இருந்தார்.  நள்ளிரவில் அவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது சுவாமிகளின் கை மட்டும் தனியே வந்து தன் கழுத்தை நெரிப்பது போல் உணர்ந்தார்.  அதன் பின் அவருக்குத் தூக்கமே வரவில்லை.

மறுநாள், இருளப்பத்தேவரின் பள்ளிக்கே வந்து சுவாமிகளிடமும், அவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, சுவாமிகளையும் சந்தித்து அவரது ஆசியைப் பெற்றாராம் கிருஷ்ணராவ். பழநியில் மளிகைக் கடை வைத்திருந்தவர் ஜெயபால் என்பவர்.  சித்தர்களிடம் அபாரமான ஈடுபாடும் பக்தியும் கொண்டவர்.  ஒரு முறை பழநிஅருள்மிகு பழநி ஆண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுரியில் பேராசிரியராகப் பணி புரியும் கண்ணன் என்பவரையும், வேறு சில நண்பார்களையும் அழைத்துக் கொண்டு கசவணம்பட்டி சுவாமிகளைக் காண ஒரு காரில் பயணமானார். இவர்கள் அனைவரும் கசவணம்பட்டிக்குப் போனபோது, சுவாமிகள் தென்புறம் ஒடைக்குப் பக்கத்தில் உள்ள ஒரு சாக்கடையில் அமிழ்ந்திருந்தார்.  சுவாமிகளது மூக்கு மட்டும் சாக்கடை நீர்மட்டத்துக்கு வெளியே தெரிந்தது.  சரி, சுவாமிகள் எழுந்து வரட்டும்.  அவரைத் தரிசித்து விட்டுப் போகலாம் என்று ஜெயபால், கண்ணன் மற்றும் நண்பர்கள் அங்கேயே ஓரமாக அமர்ந்திருந்தனர்.  சில நிமிடங்கள் கடந்த பின் சாக்கடையின் குபீர் துர்நாற்றம் இவர்களைப் பாடாகப் படுத்தியது.  மூக்கைப் பொத்திக் கொண்டார்கள்.  ஒரு சிலருக்கு வாந்தியே வருவது போல் வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது.  இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொண்டு சுவாமிகள் எப்படி வெகு நேரத்துக்கு சாக்கடையில் மூழ்கிக் கிடக்கிறார்.  என்று இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.  சுமார் ஒரு மணி நேரம் கடந்திருக்கும்.  அப்போதுதான் சுவாமிகள் சாக்கடையில் இருந்து எழுந்தார்.  எழுந்து வந்ததும், ஓரு நண்பர் சிகரெட் ஒன்றை சுவாமிகளிடம் கொடுத்தார். அதைப் பற்ற வைத்து ஊதினார். பிறகு, அந்த சாம்பலை விபூதியாக பாவித்து,  இவர்களின் நெற்றியில் பூசினார்.  ஆசி பெறுவதற்காக அவரது திருப்பாதங்களில் விழுந்தனர்.  அப்போது அந்த இடத்தைக் கடந்த ஒருவனிடம் ஏதோ சைகை காட்டி, ஒரு டம்ளரை வாங்கினார் சுவாமிகள். அதுவரை தான் மூழ்கி இருந்த சாக்கடைக்குள் டம்ளரை விட்டு, முக்கால் அளவுக்கு அந்த நீரை முகர்ந்தார். முதலில் ஜெயபாலிடம் அதைக் கொடுத்த சுவாமிகள். ம்ம்ம். குடிடா என்று உத்தரவிட்டார்.

சுவாமிகளே தன் கையால் எடுத்துக் கொடுத்ததும், அதை மறுக்காமல் வாங்கி, சாக்கடை நீரைப் பருகிறோமே என்கிற அருவருப்பு வெளியே தெரியாதபடி ஒரே மடக்கில் குடித்தார் ஜெயபால் .  அதன்பின் கண்ணன் உட்பட மற்றவர்களுக்கும் இதேபோல் சாக்கடை நீரை அந்த டம்ளரில் முகர்ந்து கொடுத்தார் சுவாமிகள்.  அனைவரும் குடித்தனர்.  அதன் பின் சுவாமிகள் நடந்து போய் விட்டார்.  ஒவ்வொருவரும் சாக்கடை நீரைக் குடித்த தங்களது அனுபவத்தைப் பகிரிந்து கொண்டனர். என்னவென்றால்,  அந்த சாக்கடை நீர் கொஞ்சமாககூட துர்நற்றம் இல்லாமல், தித்திக்கும் இளநீராக இவர்கள் அனைவருக்குமே இனித்திருக்கிறது. கையில் வாங்கும்போது சாக்கடை நீராக இருந்தது. வாய்க்குள் போனதும் இளநீராக மாறி விட்டது.  சுவாமிகளின் அருட்செயலை வியந்தபடி அங்கிருந்து பழநிக்குப் புறப்பட்டார்கள் அனைவரும்.

இதுபோல் எண்ணற்ற விளையாடல்களை நிகழ்த்தி உள்ளார். கசவனம்பட்டி சுவாமிகள்.  அவை அனைத்தையும் இங்கே சொல்வது இயலாத ஒன்று.

எந்த ஒரு துவக்கத்துக்கும் முடிவு உண்டல்லவா?  அந்த முடிவு கசவணம்பட்டி சுவாமிகளுக்கு 22.10.1982 அன்று ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தன்று நிகழ்ந்தது.  அன்றைய தினம் அதிகாலை வேளையில் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டார் சுவாமிகள்.  ஆனால், மறுநாள் தன்னை சமாதியில் வைக்கும் வரை தன் உடலில் இருந்த ஆன்ம ஒளியைஉடலில் இருந்து பிரித்து விடாமல் பிரகாசமாகவே இருந்தார் சுவாமிகள்.  சமாதி நேரத்தில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வானம் மழையைப் பொழிவித்துக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.  கருடன் மூன்று முறை வட்டமிட்டு வலம் வந்தது. சுவாமிகளுக்காக அமைக்கப்பட்ட திருக்கோயிலில் அவரது திருவுடல் முறையாக சமாதி ஆனது.  சுவாமிகளின் உடல் கிழே இறக்கப்பட்டு , விதம் விதமான அபிஷேகங்கள் நடந்தன. கற்பூரம், விபூதி, சந்தனம், பன்னீர், ஜவ்வாது போன்றவை மணம் பரப்ப... ஒரு மகானின் திருவுடலுக்கு முடிவு வந்தது.

இறப்பு  என்பது மகான்களைப் பொறுத்தவரை உடலுக்கு மட்டும்தான், ஆன்மாவுக்கு அல்ல.  இன்றைக்கும் தன் இருப்பிடம் தேடி வரும் பக்தர்களுக்கு அருளி, ஆசி வழங்கி வருகிறார் கசவனம்பட்டி சுவாமிகள்.  பலிபீடம், நந்தி ஆகியவை, சமாதியின் முகப்பில் காணப்படுகின்றன. உள்ளே-சுவாமிகளின் இரு உலோகத் திருமேனிகள் அவர் எப்படி அமர்ந்திருப்பாரோ.  அதே நிலையிலேயே தரிசனம் தருகின்றன.  சுவாமிகள் சமாதி கொண்ட இடத்தின் மேலே ஒரு லிங்கத் திருமேனி.  ராஜகோபுரம், விசாலமான மண்டபம். கருவறை, பிராகாரம்.  அன்னதானக் கூடம் என்று இந்த ஆலயம் காட்சி தருகிறது.  எண்ணற்ற சாதுக்களும் அக்கம்பக்கத்து ஊர்க்காரர்களும் தினமும் இங்கே வந்து தரிசித்துச் செல்கிறார்கள்.  ஐந்து கால பூஜை பௌர்ணமி, அமாவசை, கிருத்திகை, பிரதோஷம், மாதா மாதம் வரும் மூல நட்சத்திரம் போன்ற தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கசவனம்பட்டி சென்று அந்த மகானின் ஆனந்த சந்நிதியைத் தரிசித்து விட்டு வருவோம்!

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar