காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் ராஜகோபுரம் எதிரில், ரூ.40 லட்சம் மதிப்பில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது. திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் ள்தோறும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருநள்ளார் கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் கோவில் ராஜகோபுரம் வாசல் முன்பு கான்கிரீட் மூலம் மேற்கூரை அமைக்கப்பட்டது. ஏழுநிலை ராஜகோபுரத்தின் முகப்பில் ரூ.40 லட்சம் மதிப்பில் கருங்கல் மண்டபம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி விரைவில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் கூறுகையில், சனீஸ்வர பகவான் கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனிப்பெயர்ச்சி விழா மிகவும் பிரசித்தி பெற்றது.
சனிப்பெயர்ச்சி விழா, வரும் டிச.16ம் தேதி நடக்கிறது. அன்று மதியம் 2.43 மணிக்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப் பெயர்ச்சி விழாவிற்கு பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால், பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ராஜகோபுரம் முகப்பு கருங்கல் மண்டப பணிகளை நவ., மாத இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.