பதிவு செய்த நாள்
12
நவ
2014
11:11
அந்தியூர் : அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, யாக வேள்வி குண்டங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தியூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீகுருநாத ஸ்வாமி கோவில், தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்றது. 400 ஆண்டுகளுக்கு பின், அந்தியூரை சேர்ந்த டி.ஆர்.முனுசாமி நாயுடு மகன் ராம்கிராமகிருஷ்ணன் நிதியுதவி மற்றும் நன்கொடையால், காமாட்சி அம்மன், பெருமாள் சுவாமி மற்றும் குருநாத ஸ்வாமிக்கு கோவில் கோபுர விமானங்கள் புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் நிறைவடைந்து வருகிறது.நவ., 27ம் தேதி காலை மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. முன்னதாக, 24ம் தேதி மாலை, வனக்கோவிலில் இருந்து, காவிரி தீர்த்தம் கொண்டு வந்து, 25ம் தேதி காலை, 8 மணிக்கு மேல் ஸ்ரீமகா கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் துவங்குகிறது. மாலை, 4.30 மணிக்கு மேல், முளைப்பாளிகை ஊர்வலத்தை அடுத்து, விநாயகர் பூஜையுடன், முதற்கால யாக வேள்வி துவங்குகிறது. 26ம் தேதி காலை, 9 மணிக்கு மேல், இரண்டாம் கால யாகவேள்வியும், இரவு 7.30 மணிக்கு மேல் விமானக்கோபுரக்கலசங்களை வைத்து, மூன்றாம் கால யாகவேள்விகள் நடக்கிறது. நவ., 27ம் தேதி காலை, 10.30 மணிக்கு மேல் கோபுர விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. பின், 11.30 மணிக்கு மேல் மூலவர் ஸ்ரீகாமாட்சி அம்மன், ஸ்ரீபெருமாள் சுவாமி, ஸ்ரீகுருநாதஸ்வாமி ஆகிய தெய்வங்களுங்கு மகாகும்பாபிஷேகம் மற்றும் கோ பூஜை நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும்.தற்போது, யாக வேள்விக்கான குண்டம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோவில் கோபுரம், வர்ணம் தீட்டப்பட்டு, பளிச்சிடுகிறது.இத்தகவலை செயல் அலுவலர் பாலமுருகன் மற்றும் அறங்காவலர் சாந்தப்பன் ஆகியோர் தெரிவித்தனர்.