பதிவு செய்த நாள்
12
நவ
2014
11:11
மதுரை : சபரிமலை சீசன் நவ.,17 ல் துவங்கவுள்ள நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்கு கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் மீனாட்சி கோயிலுக்கும் வருகின்றனர். மதுரைக்கு இந்தாண்டு பக்தர்களின் வருகை 20 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
பிளாஸ்டிக் கழிப்பறைகள்: எல்லீஸ்நகரில் ரூ.4 லட்சம் மதிப்பில், 10 நவீன ரெடிமேடு பிளாஸ்டிக் கழிப்பறைகள் வைக்கப்படவுள்ளன. குண்டும், குழியுமான சாலையில் ’பேட்ச் ஒர்க்’ பணிகள் நடக்கிறது. அங்குள்ள மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான தங்கும் விடுதி, பக்தர்களுக்கு வாடகைக்கு விடப்படும். ஆறுபேர் தங்கும் அறையின் வாடகை 24 மணி நேரத்திற்கு ரூ.900. டபுள் பெட்ரூம் ரூ.300. 50 பேர் தங்கும் அறையில் நபர் ஒருவருக்கு படுக்கை மற்றும் லாக்கருக்கு ரூ.75. விவரம் அறிய 0452- 260 9868ல் தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் நேரம் நடை திறப்பு : சபரிமலை சீசனில் (நவ.,17 முதல் ஜன.,16 வரை) மீனாட்சி அம்மன் கோயில் நடையை கூடுதல் நேரம் திறந்து வைக்க தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி அதிகாலை 5 முதல் பகல் 12.30 மணி, மாலை 4 முதல் இரவு 10 மணி வரையும், பக்தர்கள் எண்ணிக்கை அதிகமானால் தரிசனம் முடியும் வரையும் நடை திறந்திருக்கும்.
வாகனங்களுக்கு தனி இடம் : எல்லீஸ்நகரில் பக்தர்கள் வாகனங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் 12 மணி நேரத்திற்கு வாகன கட்டணமாக பஸ் ரூ.50. வேன் ரூ.30. கார் ரூ.20. டூவீலர் ரூ.5 வசூலிக்கப்படும். தவிர மாநகராட்சி சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ்ரோடு, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், தெற்குமாரட்வீதி, தெப்பக்குளம் பகுதியில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு நடக்கிறது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் இருந்து எல்லீஸ்நகர் வழியாக கோயில் வரை சிட்டி பஸ்கள் இயக்கப்படவுள்ளன.