பதிவு செய்த நாள்
12
நவ
2014
12:11
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு கிராம தேவதை திருவாத்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்கு பின், நாளை விமரிசையாக நடைபெற உள்ளது. காஞ்சிபுரம், திருக்காலிமேடு சத்யநாத சுவாமி கோவிலுக்கு வடபுறம், திருவாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.கடந்த 1997ம் ஆண்டு, கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன் பின், 17 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கும்பாபிஷேகம் நடத்த, கிராமவாசிகள் முடிவு செய்தனர். கிராமவாசிகள் மற்றும் நன்கொடையாளர்கள் உதவியுடன், சிறிய வடிவில் இருந்த அம்மன் சிலைக்கு பதிலாக, மூன்றரை அடி உயர அம்மன் சிலை, கடந்த ஆடி மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மன் கருவறைக்கு எதிரே சிம்ம வாகனமும், பலி பீடமும்; அருகில் விநாயகர், முருகன் சிலைகளும் தனித்தனியே பிரதிஷ்டை செய்யப்பட்டன. அனைத்து திருப்பணிகளும் முடிந்த நிலையில், கும்பாபிஷேக பூஜைகள் நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 6:00 மணிக்கு யாக சாலை பூஜை நடைபெற உள்ளது. நாளை காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து அம்பாளுக்கு மகா அபிஷேகமும், நிவேதனமும் நடைபெறும். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை, கருணாகரன், செல்வம், பாரதி மற்றும் கிராமவாசிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.