பதிவு செய்த நாள்
13
நவ
2014
11:11
பாலக்காடு : குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், வரும் 17ம் தேதி, செம்பை சங்கீத உற்சவம் துவங்குகிறது. குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், கார்த்திகை மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழாவையொட்டி, செம்பை சங்கீத உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். வரும் 17ம் தேதி, சங்கீத உற்சவம் துவங்குகிறது. இதில், 3,000 இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். அன்று மாலை, 6:30 மணிக்கு, குருவாயூர் கோவில் வளாகத்தில் உள்ள மேல்பத்தூர் கலையரங்கில், கேரள குடும்ப நலம் மற்றும் தேவஸ்தான துறை அமைச்சர் சிவகுமார் உற்சவத்தை துவக்கி வைக்கிறார். இந்தாண்டுக்கான குருவாயூர் தேவஸ்தானத்தின் செம்பை நினைவு விருது, இசைக்கலைஞர் மாங்காடு நடேசனுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக, இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழக தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்.பிரபல கர்நாடக சங்கீத கலைஞர்கள் இணைந்து பாடும் பஞ்சரத்ன கீர்த்தனாலாபனம், டிச., 1ம் தேதி காலை, 9:00 மணி முதல் 10:00 மணி வரை நடை பெறுகிறது. ஏகாதசி திருவிழா நாளான டிச., 2ம் தேதி இரவு 10:00 மணிக்கு, மூத்த இசைக்கலைஞர்கள் கே.ஜி.ஜெயன் மற்றும் டி.வி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடக்கும் இறுதி கச்சேரியுடன், சங்கீத உற்சவம் நிறைவு பெறுகிறது. திருவல்லா சிவானந்தன், திருவனந்தபுரம் சுரேந்திரன், வைக்கம் வேணுகோபால், ஹரி, செம்பை சுரேஷ் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், சங்கீத உற்சவ ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.