வத்திராயிருப்பு : கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். கூமாப்பட்டி முத்தாலம்மன் கோயில் விழா பிரசித்தி பெற்றது. இங்குள்ள மக்கள் மழைவேண்டி அம்மனை வழிபட்டு தேராட்டம் நடத்துகின்றனர். தேரோட்ட விழாவிற்காக முதல்நாள் இரவு தோன்றி மறுநாள் இரவில் மறையும் இந்த அம்மன், மற்ற நாட்களில் உருவம் இன்றி பீடம் வடிவில் காணப்படுகிறார். உருவமாய் எழுந்தருளும் அம்மன் தேரோட்டம் அன்று தேரில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இதற்கான விழா நவ., 5 ல் துவங்கியது. விழாவை யொட்டி தினமும் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை பட்டிமன்றம், நாட்டுப்புற தெம்மாங்கு கலை நிகழ்ச்சி, கிராமிய கலைநிகழ்ச்சி, திருவிளக்குபூஜை என ஏழு நாட்களும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலை சிறப்பு வழிபாட்டிற்கு பின் அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் நடந்த வீதி உலாவின்போது பக்தர்கள் ஆடுகள் பலிகொடுத்தும், மாவிளக்கு வழிபாடு செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மதியம் 12 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது . பின்னர் அம்மன் தேரிலிருந்து இறங்கி சன்னிதானத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்களின் மஞ்சள்நீராட்டு, சிறப்பு பூஜைகள் முடிந்து இரவில் அம்மன் சிலையை கரைப்பதற்காக பக்தர்கள் எடுத்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் அம்மனை பூக்கள் துவி வழியனுப்பினர்.