பதிவு செய்த நாள்
13
நவ
2014
12:11
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் பழமை மாறாமல் சன்னதிகள் புதுப்பிக்கப்படும்” என தமிழக அரசின் தொல்லியல் துறை ஆலோசகர் நரசிம்மன் தெரிவித்தார். வைணவ தளங்களில் முதன்மையான இடம் பெற்றுள்ள, ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில், கும்பாபிஷேக பணிக்களுக்காக, 10.45 கோடி ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது. கோவிலில், 21 கோபுரங்களும், ஏழு பிரகாரங்களும், 54 உப சன்னதிகளில், தற்போது திருப்பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்து வரும் திருப்பணி வேலைகளை, தமிழக அரசின் தொல்லியல் துறை ஆலோசகர் நரசிம்மன் ஆய்வு செய்தார். மேலும், கோவிலில் உள்ள ஆண்டாள், கோதண்டராமர், பிள்ளைலோகாச்சாரியார், பார்த்சாரதி சன்னதிகளை பார்வையிட்டார்.பிறகு, தொல்லியல் ஆலோசகர் நரசிம்மன் கூறுகையில், “ நூறு கால் மண்டபம், உலக கட்டிட வரலாற்றுக்கு சான்றாக உள்ளது. ஒரே கட்டிடத்தில் பல்லவர், சோழர், விஜயநகர நாயக்கர் மன்னர்களின் கட்டிடகலை வடிவமைப்பில், பல்வேறு தூண்கள் கட்டப்பட்டுளள்து. இவைகள் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஸ்ரீரங்கம் கோவிலில் திருப்பணிகள் முடியும் போது, பழமை மாறாமல் சன்னதிகள் புதுக்கப்பட்டிருக்கும்” என்றார். அப்போது, அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.