பதிவு செய்த நாள்
18
நவ
2014
02:11
திருப்போரூர்: கார்த்திகை மாத பிறப்பையொட்டி, நேற்று, சபரிமலை அய்யப்பனை காண, மாலை அணிந்து விரதத்தை துவக்க, மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.அய்யப்பனை காண சபரிமலைக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் துளசிமணி மாலை அணிந்து, 48 நாட்கள் விரதத்தை துவக்குவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரம் முதலே அய்யப்ப பக்தர்கள், துளசி மாலை வாங்குவதை காண முடிந்தது.கார்த்திகை முதல் நாளான நேற்று, முக்கிய கோவில்களின் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டு மகா அபிஷேகமும், தீப ஆராதனையும் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் அய்யப்ப பக்தர்கள், தங்கள் குருசாமியுடன் வந்திருந்து, துளசி மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர். திருப்போரூர் கந்தசுவாமி கோவிலிலும், முருகனின் பாதத்தில் மாலைகள் வைத்து, அர்ச்சகர் மூலம் அணிந்து கொண்டனர். திருப்போரூர் பிரதான சாலை, அய்யப்பன் சுவாமி கோவிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கருப்பு, நீலம், காவி நிற வஸ்திரங்களை அணிந்து, துளசி மாலை அணிந்து கொண்டனர்.