பதிவு செய்த நாள்
20
நவ
2014
01:11
கோவை: கோவையில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும், கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள, 25 ஏக்கர் இடத்தில் முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்ததால், கோவை மற்றும் சுற்றியுள்ள அணைகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள், தடுப்பணைகள் நிரம்பி ததும்புகின்றன.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், வழக்கத்துக்கு அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. குளிக்கவோ, வாகனங்கள் கழுவவோ யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று உள்ளாட்சி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே சமயபுரத்திலும், வெள்ளிபாளைய த்திலும் தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் சார்பில் இரு கதவணைகள் கட்டப்பட்டுள்ளன. வெள்ளி பாளையத்தில் 20 அடி முதல் 30 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, அங்கு 20 முதல் 30 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தியாகிறது. சமயபுரம் பகுதியில் மின்உற்பத்தி துவங்கப் படாவிட்டாலும், தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் வன பத்ரகாளியம்மன் கோவிலிலிருந்து, சுமார் 2 கி.மீ., தொலைவிலுள்ள, யானைகள் முகாம் நடைபெறும் நந்தவனம் பகுதியில், நீர் மட்டம் உயரத்தில் செல்கிறது.
எனவே, இந்த ஆண்டு மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தலாமா, வேண்டாமா என்று அறநிலையத்துறை அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கோவை அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இங்குள்ள சூழல் குறித்து அரசுக்கு தினமும் அறிக்கை அனுப்பி வருகிறோம். இச்சூழலில் பவானி ஆற்றை ஒட்டி யானைகள் முகாம் நடத்துவது, உகந்ததாக இருக்குமா என்பதை, அரசுதான் முடிவு செய்ய வேண்டும்,’ என்றார்.