அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சோலைவனத் திட்டம் சார்பில் சமீபத்தில் நடப்பட்ட 1008 மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ந்து மொட்டையாக்கி வருகிறது. இக்கோயில் கோட்டைச்சுவர் ரூ.பல லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சூர்யாநகர் முதல் அழகர்கோவில் வரை ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை சார்பில் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் வழக்கம் போல் திட்டமும் கருகி விட்டது.
மரக்கன்றுகள் வளராது: கள்ளழகர் கோயிலில் சோலைவனத் திட்டம் சார்பில் சமீபத்தில் வேப்பன், புளியன், புங்கன் என 1008 மரக்கன்றுகள் நடப்பட்டு முள் வேலி அமைக்கப்பட்டது. தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் மரக்கன்றுகள் வளர்ச்சி பெறவில்லை. போதாக்குறைக்கு மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ந்து வருவதால் கன்றுகள் வளர வழியே இல்லை. பலரது முயற்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் கண் முன்னே அழிந்து வருவது வேதனைக்குரியது. நடவடிக்கை தேவை: கோயில் வளாகத்தில் கால்நடைகள் மேய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. கோட்டை நுழைவு வாயில் வழியாக வரும் கால்நடைகளை தடுப்பதில்லை. இவற்றின் கழிவுகளால் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. பட்டுப்போன மரக்கன்றுகளுக்கு பதிலாக புதியவை நட்டு பராமரிக்க வேண்டும். பக்தர்கள் நலன் கருதி கால்நடைகளை மேய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.