ரூ.1.10 கோடி செலவில் சுசீந்திரம்: ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21நவ 2014 12:11
நாகர்கோவில்: சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி ரூ.1.10 கோடி செலவில் நடைபெறுகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோயில். இங்கு மும்மூர்த்திகள் ஒருங்கே மூலவராக இருந்து அருள் பாலிக்கின்றனர். இந்த கோயிலின் ராஜகோபுரம் மிகுந்த கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ளது. ஏழு அடுக்குகளை கொண்ட கோபுரம் 130 அடி உயரம் கொண்டது. ஏழு அடுக்குகளிலும் ஏறி செல்லும் படி கோபுரம் உள்ளது. கோபுரத்தின் வெளியே கலைநயத்துடன் கூடிய சிற்பங்கள் மிகவும் நெருக்கமாக காணப்படுகிறது. உயரமான கோபுரங்கள் வேறு இருந்தாலும் கலைநயத்துடன், நெருக்கமான சிற்பங்கள் இந்த கோபுரத்தின் சிறப்பம்சமாகும். கோபுரத்தின் உள்ளே பழங்கால புராணங்கள் பச்சிலை ஓவியங்களாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களும் கோபுரசிற்பங்களும் சிதிலம் அடைந்து வந்த நிலையில் அதை பழமை மாறாமல் புதுப்பிக்க ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கி உத்தரவிடப்பட்டது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. கோபுரத்தை சுற்றி சாரம் கட்டும் பணி முடிவடைந்துள்ளது. சிரட்டைக்கரி, சுண்ணாம்பு, கடுக்காய், சர்க்கரை, பச்சிலைசாறுகள் பயன்படுத்தி கலவை தயாரிக்கப்பட்டு சிற்பங்கள் சீரமைக்கப்படுகிறது. சிமென்ட் சிறிதளவு கூட இதில் பயன்படுத்தப்பட மாட்டாது. அதுபோல பழங்கால ஓவியங்கள் பச்சிலை சாறுகளால் மீண்டும் வரையப்பட உள்ளது.