பதிவு செய்த நாள்
26
நவ
2014
11:11
தஞ்சாவூர்: தஞ்சையிலிருந்து, 25 கி.மீ., தொலைவில், பூதலூர் அருகில் அமைந்துள்ளது ஐம்பது மேல்அகரம். இங்கு, சரஸ்வதி மஹால் நூலக தமிழ்ப்பண்டிதர் மணி மாறன் ஆய்வு செய்த போது, பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த இடிந்து போன கோவிலில் சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர் சிற்பங்களைக் கண்டறிந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சோழர் காலத்தில், வளநாட்டில் அமைந்துள்ள மிகப்பெரிய வீரசிகாமணி ஏரியின் வட கரையில், ஐம்பதுமேல் அகரம் அமைந்துள்ளது. பராந்தக சோழன் காலத்தில் இந்த ஏரியை, புத்தாமூர் கனகசேனப்பிடாரன் என்ற சமணப்பள்ளியைச் சேர்ந்தவர் பராமரித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ராஜேந்திர சோழனின் காலத்தில், அவரது படைத்தளபதியாக விளங்கிய ஜெயமூரி நாடாள்வான் என்பவர், இப்பெரும் ஏரியைப் பராமரிக்கும் அதிகாரியாகவும் செயல்பட்டுள்ளார். இத்தகைய சிறப்பு பெற்ற வீரசிகாமணி பேரேரி, இன்று பரப்பளவில் சுருங்கி, சிறு குளமாக காணப்படுகின்றது. மேலும், 15ம் நூற்றாண்டில் சாளுவத் திருமலைத்தேவ மகாராஜர் சோழ மண்டலத்தில், விஜயநகரப் பேரரசின் மகா மண்டலேஸ்வரராக இருந்தார். இவரது கல்வெட்டுகள் தஞ்சை, நாகை மாவட்டங்களில் காணப்படுகின்றன. இந்த சாசனம் சில கிராமங்களில் வசூலிக்கப்படும் வரியைத் தவிர்த்து, அவற்றை இறையிலி கிராமங்களாக அறிவித்ததைத் தெரிவிக்கிறது. ஐம்பதுமேல்அகரத்தில், கி.பி., 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்திய சிவாலயம் உள்ளது. காலபோக்கில் அழிவுற்று, ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், விநாயகர், சண்டிகேஸ்வரர், தனித்த சிவலிங்க பானம் போன்றவை காணப்படுகிறது. ஆவுடையுடன் கூடிய சிவலிங்கம், நான்கடி உயரத்தில் வெள்ளை நிறக் கல்லில் அமைந்துள்ளது. விநாயகர் சிற்பம், மூன்றரையடி உயரத்தில், துதிக்கை சிதைந்த நிலையில் உள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம், மிகவும் சிதிலமுற்ற நிலையில் கோவிலின் சுவர் அருகே கிடக்கிறது. கற்றளியாக இருந்த கோவில் அழிவுற்றதால், 15ம் நூற்றாண்டில் செங்கல் கட்டுமானமாகப் புதுப்பிக்கப்பட்டு, வழிபாட்டில் இருந்திருக்கலாம். காலப்போக்கில் அதுவும் இடிந்திருக்கலாம். இவ்வாறு தெரிவித்தார்.