கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2ம் சோமவாரத்தையொட்டி 108 சங்கு அபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரம் (திங்கள் கிழமைகள்) சிவனுக்கு உகந்த நாளாகும். அதனையொட்டி சிவன் கோவில்களில் சோமவாரத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்று வருகிறது. அதன்படி கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை மாத இரண்டாம் சோமவாரத் தையொட்டி 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலையில் கலசம் பிரதிஷ்டை செய்து, 108 வலம்புரி சங்குகளில் தீர்த்தம் நிரப்பி யாகம் நடத்தப்பட்டது. பூர்ணாஹூதியைத் தொடர்ந்து கலசம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்து கலசம் மற்றும் 108 வலம்புரி சங்குகளில் உள்ள தீர்த்தத்தைக் கொண்டு பாடலீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பெரிய நாயகி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதேபோன்று வரும் 1ம் தேதி மூன்றாம் சோமவாரத்தையொட்டி அன்று காலை ருத்ரா அபிஷேகமும், மாலை 108 சங்கு அபிஷேகம் நடக்கிறது.