பதிவு செய்த நாள்
01
டிச
2014 
02:12
 
 வால்பாறை : இதயம் துாய்மையாக இருந்தால், இறைவன் உன்னிடத்தில் நிரந்தரமாக இருப்பார் என்று வால்பாறையில் நடந்த சத்யசாய்பாபா பிறந்த நாள் விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுமதி பேசினார். வால்பாறையில் தனியார் திருமண மண்டபத்தில், பகவான் சத்யசாய்பாபாவின் 89 வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 5.00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம் நகர சங்கீர்த்தனமும், காலை 9.05 மணிக்கு பிரசாந்தி திருக்கோடியேற்றுதல் நிகழ்ச்சியும், காலை 10.00 மணிக்கு சிறப்பு பஜனும் நடந்தன. வால்பாறை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு ரொட்டி, பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சத்யசாயி பாலவிஹாஸ் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு வால்பாறை இன்ஸ்பெக்டர் ஜெயராமன் பரிசுகளை வழங்கினார்.மாலை 5.00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் சுமதி பேசுகையில், இறைவன் எல்லா இடத்திலும் இருக்கிறான். அவனை எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. பிறருக்கு சேவை செய்யும் போது, அது இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதி செய்தால், புண்ணியம் கிடைக்கும். இதயம் சுத்தமாக இருந்தால், இறைவனை எங்கும் தேடி அலைய வேண்டாம். நல்ல காரியங்களை தொடர்ந்து செய்தால், சொர்க்கவாசல் உங்களுக்காக திறந்தே இருக்கும், என்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை வால்பாறை சத்யசாயி சேவா சமிதியின் கன்வீனர் சண்முகவேல், ஆன்மிக ஒருங்கிணைப்பாளர்கள் முத்துசாமி, சுப்பிரமணியம், சந்திரசேகரன், மாணிக்கம் உட்பட பலர் செய்திருந்தனர்.