திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றத்தில் நேற்று காலை தேரோட்டமும், மாலை 6.15 மணிக்கு மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. காலையில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தங்க அங்கி அலங்காரத்தில், பதினாறு கால் மண்டபம் அருகே அலங்கரிக்கப்பட்ட சிறிய வைரத் தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகளில் தேரோட்டம் நடந்தது.கோயிலுக்குள் அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தன. அதே சமயம் மலைமேல் தீப மண்டபம் அருகிலுள்ள உச்சிப்பிள்ளையார் முன்பு பூஜை நடந்தது. கோயிலுக்குள் மூலவர்கள் சன்னதிகளில் பாலதீபம் ஏற்றப்பட்டது.கோயில் மணி அடிக்கப்பட்டதும் மலைமேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி 16கால் மண்டபம் முன்பு எழுந்தருளினார்.300 பேர் கைது: மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்காக அனுமதியை மீறி மலைக்கு செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் கண்ணன், ஏகநாதன், அழகர்சாமி, ஜெயகுமார் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ., மாநில துணைத்தலைவர் சுரேந்திரன், நிர்வாகிகள் சசிராமன், ஹரி, முத்தண்ணசாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.