பதிவு செய்த நாள்
13
டிச
2014
11:12
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள், சிவன் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும், மார்கழி உற்சவம் டிச., 16 முதல் துவங்குகிறது. மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டிற்கான மாதம் ஆகும். இதையொட்டி, டிச., 16 முதல் ஜன., 15 வரை அனைத்து கோயில்களிலும் காலை 4:00 முதல் 6:00 மணிக்குள் சிறப்பு பூஜைகள் நடக்கும். பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள், எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயில்களில், ஆண்டாளின் ‘திருப்பாவை’ யும், ஈஸ்வரன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயில்களில், மாணிக்கவாசகரின் ‘திருவெம்பாவை’யும் பாடப்படும்.
முக்கிய நிகழ்ச்சியாக, அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி தினத்தில் காலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. டிச., 22 ல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. டிச., 31 ல் இரவு பெருமாள் ‘மோகினி’ அவதாரத்தில் அருள்பாலிப்பார். ஜன., 1 முதல் 10 நாட்கள் இராப்பத்து உற்சம் நடைபெறும். ஜன., 11 ல் ஆண்டாள் நாச்சியார் பெருமாளை அடையும் நாளான ‘கூடாரவள்ளி’ விழாவின் போது, சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் காலை 6:00 மணிக்கு, 108 வட்டிலில் அக்கார வடிசில், வெண்ணெய் படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜன., 5 ல் காலை 4 :00 மணிக்கு அனைத்து சிவன் கோயில்களிலும், நடராஜப் பெருமானின் ‘ஆருத்ரா தரிசனம்’ நடைபெறும். ஜன., 13 ல் சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலையான ‘காளபைரவ அஷ்டமி’ கொண்டாடப்படவுள்ளது.