சபரிமலை ஆன்லைன்’ வழிபாடு முன்பதிவு சேவை கட்டணம் 75 சதவீதம் குறைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2014 11:12
சபரிமலை: சபரிமலை வழிபாடுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை கட்டணம் 75 சதவீதம் குறைக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு மண்டல சீசன் தொடக்கம் முதல் சபரிமலை வழிபாடுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டது. இதில் கணபதிஹோமம், புஷ்பாபிஷேகம், அர்ச்சனை, களபாபிஷேகம் போன்ற வழிபாடுகள் முன்பதிவு செய்ய முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் இருந்து சேவை கட்டணமாக 100 ரூபாயும், பிரசாதம் பேக்கிங் கட்டணமாக பத்து ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இது அதிகமான கட்டணம் என்று பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலையில் அஷ்டோத்த அர்ச்சனைக்கு கட்டணம் 20 ரூபாய் ஆகும். இதை ஆன்லைனில் ஒரு பக்தர் முன்பதிவு செய்தால் அவர் 130 ரூபாய் செலுத்த வேண்டும். இது மிகவும் அதிகமானது என்று புகார் வந்ததை தொடர்ந்து தேவசம்போர்டு ஆணையர் வேணுகோபால் சர்வீஸ் கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டார். இதன்படி 100 ரூபாய் சேவை கட்டணம் 25 ரூபாயாக குறைக்கப்பட்டது. பேக்கிங் சார்ஜ் பத்து ரூபாய் அப்படியே தொடரும். பூஜைகள் முன்பதிவுக்கு மட்டுமே இந்த கட்டணக்குறைப்பு பொருந்தும். அறைகள் முன்பதிவு செய்தால் ஏற்கனவே உள்ளபடி 100 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். பூஜைகளுக்கான முன்பதிவு கட்டண குறைப்பு பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.