பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
11:06
ஈரோடு:ஈரோடு, காங்கேயம்பாளையத்தில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் இருந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஈரோடு மாவட்டம், காங்கேயம்பாளையத்தில், காவிரி ஆற்றின் நடுவே ஈஸ்வரன் அமைந்துள்ளதால், நட்டாற்றீஸ்வரர் என சிறப்பு பெற்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால், ஈரோடு மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். சில ஆண்டாக நடந்த கோவில் திருப்பணிகள் முடிந்ததால், நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.ஜூன் 10ம் தேதி முதல் தீர்த்த சங்கிரஹணம், அக்னி சங்கிரஹணம் போன்ற பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை 5.40 மணிக்கு மங்கள இசை, வேத பாராயணம், திருமுறை சமர்ப்பித்தல், நான்காம் கால யாக வேள்வி, 96 வகை திரவ்ய ஹோமம் என பல பூஜைகள் நடந்தன. காலை 11 மணிக்கு, நட்டாற்றீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஈரோடு, திருச்சி, கோவை, சேலம், கரூர் என பல மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேளாண் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம், ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுசாமி, அறநிலையத்துறை இணை கமிஷனர் தனபால் உட்பட பலர் பங்கேற்றனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டிருந்தது. ஆற்றில் குறைந்தளவே தண்ணீர் இருந்ததால், பக்தர்கள் எளிதாக கோவிலுக்கு வந்து சென்றனர்.கோட்ட தீயணைப்பு அலுவலர் மதியழகன் உத்தரவுப்படி, நிலைய அலுவலர் ராமச்சந்திரன் தலைமையில் 12 தீயணைப்பு வீரர்கள், மீட்பு ரப்பர் விசைப்படகு மூலம் ஆற்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.