பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
10:06
திருவாரூர்:வலங்கைமான் அருகே ஞானபுரி தலத்தில், 32 அடி உயர விஸ்வரூப சங்கடகர ஆஞ்சநேயர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள திருவோண மங்கலத்தில், விஸ்வ சம்ரக்ஷன மாருதி சேவா டிரஸ்ட் சார்பில் ஞானபுரி தலம் உருவாக்கப்பட்டு, 32 அடி உயர விஸ்வரூப சங்கடகர ஆஞ்சநேயர் சிலை நேற்று காலை 8 மணிக்கு எந்திர பிரதிஷ்டை, சிலை ஸ்தாபிதம் செய்யப்பட்டன. 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை செய்ய, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள சிறுதாவூரில், பூமிக்கு அடியில் இருந்து 40 அடி நீளம், 15 அடி அகலம், 30 அடி கனம் கொண்ட 380 டன் கல், அரசின் சிறப்பு அனுமதியுடன் எடுக்கப்பட்டது. இதை, புளியம்பாக்கம் பாலாஜி சிற்பக் கூடத்தில் ராமகிருஷ்ண ஸ்தபதி, மகன் மீனாட்சி சுந்தரம் ஸ்தபதி தலைமையில் சிற்பிகள் குழுவினர் உருவாக்கினர்.இந்த சிலையுடன் கோதண்டராமர் பெருமாள் கோலத்தில் அமையும்படி ராமர், லட்சுமணர், சீதை, சிறிய ஆஞ்சநேயர் மற்றும் லட்சுமி நரசிம்மர் சிலைகள் உருவாக்கப்பட்டன. நேற்று அதிகாலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, ஆதார பீடத்தில் காலை 7.30 மணிக்கு எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டது.தொடர்ந்து லட்சுமி நரசிம்மர், கோதண்டராமர் பெருமாள் பீடத்தில் எந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டன. பின்னர் காலை 8 மணிக்கு, 32 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலையை, ராட்சத கிரேன் மூலம் சென்னை எல் அண்ட் டி கம்பெனி இன்ஜினியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆதார பீடத்தில் ஸ்தாபிதம் செய்தனர். அப்போது பக்தர்கள், ராமருக்கு ஜெ! சங்கடகர ஆஞ்சநேயருக்கு ஜெ!! என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, லட்சுமி நரசிம்மர் மற்றும் கோதண்டராமர் பெருமாள் பீடத்தில் ராமர், லட்சுமணர், சீதை, சிறிய ஆஞ்சநேயர் சிலைகள் ஸ்தாபிதம் செய்யப்பட்டன. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மாலை விஸ்வரூப சங்கடகர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஞானபுரியில் காலை முதல் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டன.விழா ஏற்பாடுகளை, விஸ்வ சம்பரக்ஷன மாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.