கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு வைபவம் நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடத்தப்பட்டது.
அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத சேவை, பசு பூஜை நடத்தப்பட்டது. பெருமாள், தாயாருக்கு அலங்காரம் செய்து மண்டபத்தில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து 5 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டதும், பெருமாள், தாயார் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். உள்பிரகாரம் வலம் வந்தபின் ஆண்டாள் மண்டபத்தில் பெருமாள், தாயாரை எழுந்தருள செய்தனர். பூஜைகளை தேசிக பட்டர் செய்தார். விருகாவூர் சீனிவாச பெருமாள் கோவில், நீலமங்கலம் சீதாலஷ்மண அனுமன் சமேத கோதண்டராமர் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது.