பதிவு செய்த நாள்
02
ஜன
2015
04:01
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோயில்களில் 11 ஆண்டுகளுக்கு பின் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா. ஆதிசேஷன் குடை பிடிக்க, பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நவ திருப்பதி கோயில்களில் பெருமாள் ஒன்பது அவதாரங்களாக காட்சியளிக்கின்றார். திருப்பதி கோயிலுக்கு செல்லும் போது கிடைக்கும் பலன் , இந்த ஒன்பது கோயில்களில் பெருமாளை வணங்கினால் கிட்டும், என பக்தர்கள் நம்பிக்கை. நவ திருப்பதி கோயில்களில் சுவாமி, ஸ்ரீவைகுண்டத்தில் கள்ளபிரானாகவும், நத்தத்தில் எம்மிடர்கடிவானாகவும், திருப்புளியங்குடியில் காய்ச்சினவேந்த பெருமாளாகவும், பெருங்குளத்தில் மாயக்கூத்தராகவும், இரட்டை திருப்பதியில் தேவர் பிரானாகவும், தொலவில்லிமங்கலத்தில் செந்தாமரைக்கண்ணனாகவும், தென்திருப்பேரையில் நிகரில் முகில் வண்ணனாகவும், திருக்கோளூரில் வைத்தமாநதியாகவும், ஆழ்வார் திருநகரியில் பொலிந்துநின்ற பெருமானாகவும் காட்சியளித்து வருகிறார்.
நவ திருப்பதி கோயில்களில் மார்கழி திரு அத்யயன திருவிழா டிச.,22 முதல் 31 வரை பகல் பத்து திருவிழா நடந்தது. இராப்பத்து விழாவின் முதல் நாளான(ஜன.,1) நேற்று சுவாமி ஆதிசேஷன் குடை பிடிக்க, சயன கோலத்தில், தாயார்களுடன் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். வேண்டுதல்கள் நிறைவேற கருடாழ்வார் முன்னிலையில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். நேற்று இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் இரவு 7 மணிக்கும், தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் கோயிலில், இரவு 8 மணிக்கும், ஆழ்வார் திருநகரி பொலிந்து நின்ற பெருமான் கோயிலில் (ஜன., 2) அதிகாலை ஒரு மணிக்கும் பரமபத வாசல், என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் திரளாக பெருமாளை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சிவராம்பிரபு செய்திருந்தார்.
ஸ்ரீ வைகுண்டம் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி கூறியதாவது: 1977 ம் ஆண்டு ஜன., 1 ம் தேதி இந்து,முஸ்லிம், கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாட்கள் வந்தது. இந்துக்களின் வைகுண்ட ஏகாதசி, முஸ்லிம்களின் மொகரம் பண்டிகை, கிறிஸ்தவர்களின் ஆங்கிலப்புத்தாண்டு விழா ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. 2004 ஜன., 1 ம் தேதியில் ஆங்கிலப்புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியும் வந்தது. தற்போது 11 ஆண்டுகளுக்குப்பின் நேற்று வைகுண்ட ஏகாதசியும், ஆங்கிலப்புதண்டாண்டும் ஒரே நாளில் வந்துள்ளது, என்றார். வட மாவட்டங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. நம்மாழ்வார் கோயில்களில் பத்து நாட்களில் திருவிழா முடிந்த பின் பெருமாள் சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். அதன் பின்பு தான் அவர் பரமபத வாசலுக்கு செல்வதால், இரவு நேரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார், என அவர் தெரிவித்தார்