பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
சேலம் : சேலத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அனைத்து பெருமாள் கோவில்களிலும், நேற்று அதிகாலை முதல், பக்தர்களும், பொதுமக்களும், நீண்ட வரிசையில் காத்திருந்து, ஸ்வாமியை தரிசித்து சென்றனர். கோவிந்தா...கோவிந்தா... என விண்ணைப்பிளக்கும் வகையில், பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.
பள்ளிக்கொண்ட பரந்தாமனுக்கு பிடித்த மாதமாக கருதப்படுவது மார்கழி. மற்ற மாதங்களில் வரும் ஏகாதசி விழாவை காட்டிலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும், ஏகாதசி விழா சிறப்பானது. அதைத்தான், வைகுண்ட ஏகாதசி விழாவாக குறிப்பிட்டு பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில், அனைத்து பெருமாள் கோவில்களிலும், அதிகாலையில், பரமபதம் எனும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.நேற்று, 2015, புத்தாண்டு நாளில், வைகுண்ட ஏகாதசி விழா வந்ததை, பக்தர்கள் சிறப்பானதாக கருதினர். வைகுண்ட ஏகாதசியையொட்டி, இரவு முழுவதும், நாராயண பாராயணம் பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதிகாலை, 5 மணிக்கு, பெருமாள் கோவில்களில், ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேதராக, வெங்கடேச பெருமாள், சொர்க்கவாசல் வழியாக, கோவிலை வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள், அந்த அற்புத காட்சியை கண்டு, கோவிந்தா...கோவிந்தா என கோஷம் எழுப்பி ஸ்வாமியை மனமுருகி வழிபட்டனர்.
சேலம் கோட்டை அழகிரிநாத ஸ்வாமி கோவிலில், அதிகாலை, 5 மணிக்கு, உற்சவமூர்த்தி, பரமபதவாசல் வழியாக வரும் நிகழ்ச்சி நடந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஸ்வாமியை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மழை பெய்தபோதும், குடையை பிடித்தபடி, கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்டனர். காலை துவங்கிய கூட்டம், இரவு, 9 மணி வரை நீடித்தது. பக்தர்களின் வசதிக்காக, சிறப்பு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீஸார் அதிகளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.அதேபோல், செவ்வாய்பேட்டை பிரசன்னவெங்கடாசலபதி கோவிலும், சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. யானையின் காலை, முதலை கவ்விப்பிடிக்கும்போது, கருட வாகனத்தில் வந்து பெருமாள் காப்பாற்றியதை குறிக்கும் வகையில், கோலத்தால் ஆன ஓவியம், கோவில் வளாகத்தில் வரையப்பட்டிருந்தது. ஸ்வாமி வழிபாட்டுக்கு வந்த பக்தர்கள், அவற்றை பார்த்து தரிசித்து சென்றனர்.
மேலும், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாத ஸ்வாமி கோவிலிலும், சின்னதிருப்பதி வெங்கடாசலபதி கோவிலும், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலிலும், இரண்டாவது அக்ரஹாரம் லட்சுமிநரசிம்மர் ஸ்வாமி கோவிலிலும், ஃபேர்லண்ட்ஸ் பிருந்தாவன் ரோடு வெங்கடாசலபதி கோவிலிலும், பட்டக்கோவிலிலும், ஏகாதசி விழாவையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில், மழை, வெயிலை பொருட்படுத்தாமல் காத்திருந்து, பெருமாளை தரிசித்து சென்றனர்.
ஆத்தூர், அயோத்தியாபட்டணம், சங்ககிரி, ஓமலூர், தலைவாசல், நங்கவள்ளி உள்ளிட்ட பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெரும்பாலான கோவில்களில், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆண்டாள் மற்றும் தாயார் சன்னதிகளில், ஸ்வாமிக்கு தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகளையும், பாதுகாப்பையும், கோவில் நிர்வாகத்தினரும், போலீஸாரும் செய்திருந்தனர்.