பதிவு செய்த நாள்
02
ஜன
2015
05:01
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டதால், லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் வழிபாடு செய்தனர். புத்தாண்டு பிறப்பு என்பதால், அனைத்து கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், "கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன், கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக, மாவட்ட போலீஸாரின் சார்பில், பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு, சில இடங்களில் போக்குவரத்து இடமாற்றம் செய்யப்பட்டது.அதிகாலை, 3.30 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சியுடன், நித்ய பூஜை நடத்தி, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, ஸ்வாமியை தரிசனம் செய்தனர். விழாக்குழுவினர் சார்பில், ஸ்வாமியை தரிசித்துவிட்டு சென்ற பக்தர்களுக்கு, லட்டு, பழம், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
நாமக்கல் அரங்கநாதர் கோவில், வளையப்பட்டி பிரசன்ன வெங்கட பெருமாள் கோவில், மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட பெருமாள் கோவில், ராசிபுரம் பொன் வருதராஜ பெருமாள் கோவில், சேந்தமங்கலம் வருதராஜ பெருமாள் கோவில், பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவில், குமாரபாளையம் பாண்டுரங்கன் கோவில், ராமர் கோவில், திருச்செங்கோடு மகாலட்சுமி பெருமாள் கோவில், ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால், பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், தாயார் சன்னதி மற்றும் நரசிம்மர் கோவில், ஐயப்பன் கோவில், பலப்பட்டறை மாரியம்மன், மோகனூர் காந்தமலை பாலமுருகன் கோவில், ராசிபுரம் கைலாசநாதர் கோவில், மாரியம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில், அங்காளபரமேஸ்வரி கோவில், புதுப்பட்டி துளுக்கசூடாமணி கோவில், ப.வேலூர் பஞ்சமுக விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.