புதுச்சேரி: வைத்திக்குப்பம் குரு அக்கா சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசனம் நேற்று முன்தினம் நடந்தது. இதனை முன்னிட்டு, அதிகாலை 5.30 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6.00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. மாலை 6.00 மணிக்கு, வைத்திக்குப்பம் ஜெயராம ராமானுஜதாசர் வெங்கடாஜலபதி பஜனைக் கூடத்திலிருந்து, ராதா ருக்மணி சமேத பக்தவச்சலகுண பாண்டுரங்க சுவாமி, சீர்வரிசையுடன் வீதியுலாவாக சென்று, அக்கா சுவாமி கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 9.00 மணிக்கு, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானின், திருநடனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை குரு அக்கா சுவாமிகள் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர்.