பதிவு செய்த நாள்
09
ஜன
2015
10:01
பழநி: பழநி தைப்பூச திருவிழா ஜன.,28 ல் துவங்கி பிப்.,6 வரை பத்து நாட்கள் நடக்க உள்ளது. இதையொட்டி தடையில்லா மின்சாரமும், மூவாயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.பழநி தைப்பூச திருவிழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் பழநியில் நடந்தது.
வேணுகோபாலு எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் வேலுமணி, ஆர்.டி.ஓ., கீதா, நகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், சுகாதாரத்துறை துணை இயக்குனர் வரதராஜன், தாசில்தார் மாரியப்பன் கலந்து கொண்டனர்.பழநிக்கு கூடுதலாக ரயில்கள் இயக்கம், டோல்கேட், கழிப்பறைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை, மலைக்கோயில் யானை படிப்பாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம், பாதயாத்திரை பக்தர்களுக்காக நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிப்பது என கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.கலெக்டர் ஹரிகரன்: இடும்பன்குளத்தில் விபத்து ஏற்படாத வகையில் தற்காலிக வேலி, படகு மூலம் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும். அன்னதானம் வழங்குவோர் மருத்துவ அலுவலரிடம் அனுமதிபெறவேண்டும். பஸ்கள், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல்செய்வதை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.எஸ்.பி.,சரவணன்: திருட்டு, வழிப்பறியை தடுக்க கிரிவீதிகள், சன்னதிவீதி, மலைக்கோயில் படிப்பாதை, யானைப்பாதை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. மூன்றாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், என்றார்.இணை கமிஷனர் ராஜமாணிக்கம்: பக்தர்கள் ஓய்வெடுக்க கன்னிவாடி, ரெட்டியார் சத்திரம், கொங்கூர், குமரலிங்கம், ஆயக்குடி, சத்திரப்பட்டி பகுதிகளில் நிரந்தரமாக 7 இடங்களிலும், தற்காலிகமாக 49 பகுதியிலும் நிழற்பந்தல்கள் அமைக்கப்படும்.
நடமாடும் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து தரப்படும். யானைப்பாதை, படிப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்படும், என்றார்.பழநிஒட்டன்சத்திரம் வரை இரண்டு நடமாடும் மருத்துவ குழுக்கள் உட்பட மொத்தம் 40 மருத்துவ குழுக்கள் அமைக்கப்படும், என சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரவிகலாவும், விழா நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும் என மின் வாரிய அதிகாரிகளும் தெரிவித்தனர்.