புல்மேட்டில் போலீசார் பாதுகாப்பு: மகரவிளக்கு நாளில் கடும் கட்டுப்பாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2015 11:01
நாகர்கோவில்: மகரவிளக்கு நாளில் புல்மேட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும், இங்கு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் கேரள போலீஸ் ஏடிஜிபி பத்மகுமார் கூறினார். குமுளியில் இருந்து புல்மேடு வரை சென்று இடங்களை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குமுளி- புல்மேடு பாதையில் கோழிகானம் முதல் புல்மேடு வரை உள்ள இடங்களில் வெளிச்சம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த பகுதியில் 150 ஆஸ்கா லைட்டுகள் நிறுவப்படும். 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். புல்மேட்டுக்கும், குமுளிக்கும் இடையே ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும். மகரவிளக்கு நாளில் கோழிகானத்தில் இருந்து புல்மேட்டுக்கு அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ரோட்டில் டிராபிக்ஜாம் ஏற்பட்டால் அதை கண்டறிந்து சரி செய்ய டூவீலர்களில் போலீசார் பட்ரோலிங் நடத்துவார்கள். செங்குத்தான இடங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். புல்மேடு விபத்து பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஹரிகரன்நாயர் கமிட்டி அளித்த சிபாரிசுகளின் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.