பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
மேட்டுப்பாளையம்: யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாமில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அனைத்து யானைகளும் விநாயகருக்கு பூஜை செய்தன. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே, பவானி ஆற்றின் கரையோரம், யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறுகிறது. இங்கு தமிழகம், புதுச்சேரியில் உள்ள கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமான 30 யானைகள் உள்ளன. இவைகளுக்கு தினமும் காலை, மாலையில் நடைபயிற்சியும், பசும்புல் தீவனம் மற்றும் சத்தான உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. முகாமில், பொங்கல் விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணிக்கு அனைத்து யானைகளையும் குளிக்க வைத்து அலங்காரம் செய்து, வரிசையாக நிறுத்தப்பட்டன. பின்,கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. பொங்கல் பொங்கும் போது, யானைகள் தனித்தனியாக மணியடித்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தன. பொங்கல், கரும்பு, அவல் ஆகிய உணவுப் பொருட்கள் யானைகளுக்கு வழங்கப்பட்டன. அதன் பின், பாகன்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகளும், புத்தாடைகளும் வழங்கப்பட்டன. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி, உதவி கமிஷனர்கள் ஜீவானந்தம், கருணாநிதி, முகாம் அதிகாரி நந்தகுமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.