பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
ஈரோடு: கோவில் விழாவில் கத்தி போட்டு, வாலிபர்கள் ஆட்டம் ஆடி, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு, தில்லை நகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தேவாங்க சமுதாயத்தின் குல தெய்வமாக விளங்குகிறது. ஆண்டுதோறும், இக்கோவிலில் தை பொங்கல் சிறப்பாக நடக்கும். 19ம் ஆண்டு விழா, 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, காரை வாய்க்கால் சின்னமாரியம்மன் கோவிலில் பூஜை செய்தனர். அப்போது, அந்த சமுதாயத்தை சேர்ந்த சேலம், இளம்பிள்ளை, சீனாபுரம், ஈரோட்டை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கத்தி போட்டு ஆட்டம் ஆடி, அம்மனை அழைத்தனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மேள தாளங்கள் முழங்க, வாலிபர்கள் கத்தி போட்டு ஆட்டம் ஆடியவாறு, கோவிலுக்கு அம்மனை அழைத்து சென்றனர். கத்தி போட்டு ஆட்டம் ஆடியவாறு தான், அம்மனை அழைத்து செல்ல வேண்டும் என்பது மரபு. அதன்படி அம்மனை அழைத்து சென்றனர். பின்னர் கோவிலில் விசேஷ பூஜை, தீபாராதனைகள் நடந்தது. பின்னர் ராகு தீப ஜோதி ஊர்வலம் நடந்தது. இன்று அபிஷேகம், மறுபூஜை ஆகியவை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வரும், 17ம் தேதி மாலை, 4.30 மணிக்கு ஹயக்ரீவருக்கு வித்யார்த்தி ஹோமம்
நடக்கிறது.