பதிவு செய்த நாள்
17
ஜன
2015
02:01
நீலகிரி மாவட்டம், முதுமலை மற்றும் கோவை மாவட்டம், டாப்சிலிப்பில் யானைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதுமலை, புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பொங்கல் விழா நேற்று நடந்தது. மாயார் ஆற்றில் குளிப்பாட்டப்பட்ட யானைகள், நெற்றியில் திருநீறு பூசி, வரிசையாக நிறுத்தப்பட்டன. காலை, 9:00 மணிக்கு, அங்குள்ள விநாயகர் கோவிலில், பொங்கல் சிறப்பு பூஜை நடந்தது. யானைகளுக்கு தீபாராதனை காட்டி, வனத்துறையினர் பொங்கல் வழங்கினர். இதை, சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். முதுமலையில் உள்ள அபயாரண்யம், பாம்பெக்ஸ் யானைகள் முகாமிலும் பொங்கல் விழா நடத்தப்பட்டது. விழாவில், 26 வளர்ப்பு யானைகள் பங்கேற்றன. கோவை, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், டாப்சிலிப் கோழிக்கமுத்தியில் யானைப்பொங்கல் விழா நடந்தது. 18 யானைகள் இதில் பங்கேற்றன. 11 மாத குட்டி யானையும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது. நெற்றிப்பட்டம் அணிவிக்கப்பட்ட, கலீம் யானை, அணிவகுப்பில் தலைமை தாங்கி கம்பீரமாக வந்தது.