நெய் அபிஷேகம் நிறைவு; இன்று குருதி பூஜை:நடை நாளை அடைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2015 11:01
சபரிமலை:சபரிமலையில் நெய் அபிஷேகம் நேற்று காலை நிறைவு பெற்றது. இன்று இரவு 10.30 மணிக்கு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடக்கிறது. நாளை காலை நடை அடைக்கப்படும்.
மண்டல,- மகரவிளக்கு காலத்தில் 60 நாட்களாக நடைபெற்று வந்த நெய் அபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நிறைவு பெற்றது. பின், கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டன. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு களப பூஜை நடத்தினார். பிரம்ம கலசம் பூஜித்து அதில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி எடுத்து கோயிலை வலம் வந்தார். ஐயப்பன் விக்ரகத்தில் களப அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சபூஜை நடந்தது.
மகரவிளக்கு நடந்த ஜன.,14 முதல் தினமும் இரவு 9.30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் யானை மீது 18-ம் படி முன் எழுந்தருளினார். நேற்று சரங்குத்தி வரை சென்ற இந்த பவனி கோயிலுக்கு திரும்பியது.இன்று காலை 10 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றாலும், நெய் அபிஷேகம் கிடையாது. இன்று வரும் பக்தர்கள் நெய்யை கோயிலில் கொடுத்து விட்டு அபிஷேகம் செய்த நெய் பிரசாதமாக பெற்று செல்லலாம். இரவு 10.30 மணிக்கு மாளிகைப் புறத்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடைபெற்றது. இன்று இரவு 10 மணிக்கு பின் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது.
நாளை காலை 5 மணிக்கு நடை திறந்த பின்னர் 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி மகயிரம் திருநாள் கேரளவர்மா ராஜா ஸ்ரீகோயில் முன்புறம் வருவார். அவரது முன்னிலையில் கோயில் நடைஅடைத்து சாவியையும், பணமுடிப்பையும் மேல்சாந்தி கொடுப்பார். அதை பெற்றுக் கொண்டு 18-ம் படிக்கு கீழே வரும் அவர், மீண்டும் மேல்சாந்தியிடம் சாவியை கொடுத்து, வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் திரும்பி செல்வார்.