பதிவு செய்த நாள்
03
பிப்
2015
12:02
வடலூர்: வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 144வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 144வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழா, இன்று நடக்கிறது. கடந்த, 29ம் தேதி துவங்கி, நேற்று வரை, ஞானசபையில் திரு அருட்பா முற்றோதல் நடந்தது. நேற்று காலை 7:30 மணிக்கு, தரும சாலை, வள்ளலார் அவதரித்த மருதூர், கருங்குழி ஆகிய இடங்களில் கிராம மக்கள் சார்பில், சன்மார்க்கக் கொடியேற்றம் நடந்தது. இன்று காலை 6:00, 10:00; பிற்பகல் 1:00; இரவு 7:00, 10:00 மற்றும் நாளை அதிகாலை 5:30 மணி என, ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நடைபெறும்.
ஜோதி தரிசனத்தை ஒட்டி, 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். 15க்கும் மேற்பட்ட இடங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 200க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வரும், 5ம் தேதி காலை 10:00 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பேழை அலங்கரிக்கப்பட்டு, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் எடுத்துச் செல்லப்படும். வள்ளலார் சித்தி பெற்ற அறை முன் வைத்து திரு அறை தரிசனம், பிற்பகல் 12:00 துவங்கி, மாலை 6:00 மணி வரை நடக்கிறது.