பதிவு செய்த நாள்
17
ஜூன்
2011
03:06
பெரியநம்பிக்கு அந்த இளைஞரின் தேஜஸான முகத்தைப் பார்த்து உடலில் வித்தியாசமான உணர்வுகளெல்லாம் ஏற்பட்டது. ராமானுஜர் அந்தப் பெரியவரைக் கவனித்தார். யார் இவர்? என மனதில் கேள்வி. அருகில் வந்தார். தாங்கள் யார்? நான் பெரியநம்பி. ஆளவந்தார் என்னை அனுப்பி வைத்தார்,. ஆளவந்தாரால் அனுப்பப்பட்டவரா? ஆச்சரிய மிகுதியால் ராமானுஜர், அப்படியா? அந்த மகானுபாவருக்கு உடல்நலம் சரியில்லை என கேள்விப்பட்டேன். தற்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள்? என பணிவோடு கேட்டார். நான் புறப்படும் போது உடல்நலம் பரவாயில்லை, என்ற நம்பியிடம், தாங்கள் காஞ்சிபுரத்திற்கு வந்த காரணத்தை தெரிந்து கொள்ளலாமா? என்றார். ஐயனே! தங்களை அழைத்து வரும்படி ஆச்சாரியார் எனக்கு உத்தரவிட்டார். அதை நிறைவேற்றவே யான் வந்தேன், என்றதும், ராமானுஜரின் மகிழ்ச்சி எல்லை கடந்தது. கை, கால்கள் விறைத்தன. என்ன சொல்கிறீர்கள்? அந்த மகாபிரபுவா என்னை சந்திக்க வேண்டுமென்றார்கள். நான் பிறவிப்பயனை அடைந்தேன். அவர்களே என்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்றால்... இதற்கு மேல் ராமானுஜரால் பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கி விட்டன. ஐயனே! சற்று பொறுத்திருங்கள். நான் பேரருளாளனான வரதராஜனின் அபிஷேகத்திற்கு இத்தீர்த்தத்தை சமர்ப்பித்து விட்டு வந்து விடுகிறேன், என்றவர் அவசர அவசரமாய் ஓடினார். மிக விரைவில் திரும்பி வந்த அவர், புறப்படுங்கள். ஆளவந்தார் பெருமானைக் காணச் செல்லலாம், என்றார். நம்பிக்கு ஆச்சரியம். ராமானுஜரே! தாங்கள் வீட்டுக்கு கூட செல்லவில்லை. இங்கிருந்து ஸ்ரீரங்கம் சென்று திரும்ப பத்துநாட்களாவது ஆகுமே. வீட்டில் தேட மாட்டார்களா! இல்லத்தை யார் கவனிப்பார்கள்? அவர்களுக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்து விட்டு வந்து விடுங்களேன், என்றார் நம்பி.
இதற்கிடையே ஒரு துயரச் சம்பவமும் ராமானுஜர் இல்லத்தில் நிகழ்ந்திருந்தது. ஆம்...ராமானுஜரின் அன்னை காந்திமதி அம்மையார் பரமபதம் சேர்ந்துவிட்டார். ராமானுஜர் இதற்காக வருத்தப்பட்டு மிகவும் சோர்ந்து போயிருந்தார். அன்னையின் பிரிவை எந்தக்குழந்தை தான் தாங்கும்? என்னதான் திருமணமாகி தாய்க்குப்பின் தாரமென அவளோடு வாழ்ந்தாலும், பெற்றவளின் பிரிவை மட்டும் ஒரு ஆண்மகனால் தாங்க முடிவதில்லை. தந்தையின் பிரிவை விட தாயின் பிரிவு ஒரு ஆண்மகனை காலம் முழுவதும் துன்புறச் செய்கிறது. தஞ்சமாம்பாள் மட்டுமே வீட்டில் தனித்திருந்தார். எனினும், ராமானுஜர் அதை பொருட்படுத்தவில்லை. நம்பிகளே! மனிதனாய் பிறந்தவன் பரமனை பணிய வேண்டும், அவனது அடியார்களுக்கு தொண்டு செய்ய வேண்டும். இதை முதலாவதாக முடித்து விட்டு, அடுத்ததாக இல்லறப் பிரச்னைகளை கவனிக்க வேண்டும். எனவே உடனே நாம் புறப்படுவோம், என்றார். அவர்கள் இருவரும் திருச்சி நோக்கி புறப்பட்டனர். செல்லும் வழியில், ஆங்காங்கே பிøக்ஷ வாங்கி சாப்பிட்டனர். எங்காவது படுத்து உறங்கி விட்டு, நடைப்பயணத்தை தொடர்ந்தார்கள். காஞ்சிபுரத்திலிருந்து காவிரிக்கரையில் ஸ்ரீரங்கநாதன் பள்ளிகொண்ட ஸ்ரீரங்கம் சென்றடைய நான்கு நாட்கள் பிடித்தது. அப்போதெல்லாம் ஸ்ரீரங்கம் செல்ல பாலம் ஏது? காவிரியை பரிசலில் கடந்து ஸ்ரீரங்கத்தை அடைந்து, திருமடத்துக்கு சென்றனர். திருமடத்தின் வாசலில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அனைவர் முகத்திலும் சோகம் கப்பியிருந்தது. பெரியநம்பிக்கு வயிற்றையே புரட்டியது. ஏதோ விபரீதம் நடந்து விட்டதோ? அப்படியானால் ஆளவந்தார்.... அவர் நினைத்தது சரிதான். ஆளவந்தார் ரங்கநாதனின் இருப்பிடத்தில் நிரந்தரமாய் துயில் கொள்ள சென்று விட்டார். சுவாமி! என்ன இது, இந்த பாவி வருவதற்கு கூட காத்திருக்காமல் போய் விட்டீர்களா? ஐயோ! இனி தங்களை என்று காண்பேன்? என பாதங்களில் விழுந்து கண்ணீரால் நீராட்டினார்.
ஆளவந்தாரை பார்க்க வேண்டுமென ஆவலுடன் ஓடிவந்த ராமானுஜரோ திக்பிரமை பிடித்தவர் போலானார். சுவாமி! இதைக்காணவா என்னை அவசர அவசரமாய் வரச் சொன்னீர்கள். ரங்கநாதா! இதென்ன கொடுமை. என் சுவாமியை என்னிடமிருந்து பிரித்து கொடுமை செய்த உன்னை சேவிக்காமலே ஊர் திரும்புவேன், என்றவராய் மயங்கி விழுந்து விட்டார். அழைத்து வந்தவர் மயங்கிக் கிடக்க, சுதாரித்துக் கொண்ட பெரியநம்பி, அவருக்கு மயக்கம் தெளிவித்தார். பின்பு ஆளவந்தாரின் அருகில் சென்ற ராமானுஜர், அவரது வலதுகையில் வித்தியாசத்தைக் கண்டார். அங்குள்ள சீடர்களை அழைத்து, ஆச்சாரியரின் கையைக் கவனித்தீர்களா? இவரது மூன்று விரல்கள் மடங்கியிருக்கிறதே. அவருக்கு எப்போதுமே இப்படித்தான் இருக்குமா? என்றார். சீடர்கள், இல்லையே, சாதாரணமாகத்தான் அவரது கை இருக்கும். இப்போது தான் விரல்கள் மடங்கியுள்ளன, என்றார். ராமானுஜர், ஆளவந்தாரின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அழுதுகொண்டிருந்தவர்கள் கூட அழுகையை நிறுத்திவிட்டு, அவர் என்ன செய்யப் போகிறார் என கவனித்தனர். மடமே நிசப்தமாய் விட்டது. ஆளவந்தார் இறந்தவரைப் போன்றே தெரியவில்லை. அவரது முகம் பிரகாசமாக இருந்தது. ராமானுஜர் அந்த முகத்தைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்தது போல, அனைவருக்கும் தோன்றியது. அப்போது ராமானுஜர் சத்தமாக பேச ஆரம்பித்தார். அவர் பேசப்பேச ஒரு பேரதிசயம் அங்கு நிகழ்ந்தது.