திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நடந்த மயான கொள்ளை திருவிழாவில் வெளிநாட்டினர் நடனமாடி கொண்டாடினர்.திருவண்ணாமலையில், மஹாசிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை விழா சிறப்பாக நடந்தது. இதை முன்னிட்டு மணலூர் பேட்டை சாலை, அசலியம்மன் கோவில் தெரு அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், அங்காளம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதி வழியாக உலா வந்து ஈசான்ய லிங்க மயானத்தை சென்றடைந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனாக அங்காளம்மன் வேடம், துர்க்கை, காளி, என பல்வேறு வேடங்கள் அணிந்து மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொண்டனர்.மலைமீது உள்ள முல்லைப்பால் தீர்த்தம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் அம்மன் வேடமணிந்து வீதி உலா வந்தனர். இதனை பார்த்த வெளிநாட்டினர் ஆர்வமுடன் கண்டு ரசித்து நடனமாடி, அவர்களின் காலில் விழுந்து வணங்கினர். நமது பாரம்பரிய விழாவான மயான கொள்ளை விழாவில், மயானம் வரை வெளிநாட்டினர் வந்து கண்டு ரசித்து சென்றனர்.