Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » கொங்கிவயல் முத்துகருப்பய்யா
கொங்கிவயல் முத்துகருப்பய்யா ஆண்டவர்!
எழுத்தின் அளவு:
கொங்கிவயல் முத்துகருப்பய்யா ஆண்டவர்!

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
04:02

கொங்கிவயல் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் கள்ளர் இனத்தில் பிறந்தவர் - முத்து கருப்பய்யா (நகரத்தார்கள் ஊரான தேவகோட்டையில்  இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது கொங்கிவயல்). தற்போது இவர் இதே ஊரில் முத்துகருப்பய்யா ஆண்டவர் சுவாமிகள் என்கிற திருநாமத்தில் சமாதி கொண்டுள்ளார். ஆண்டவர், சுவாமிகளின் 74-ஆம் ஆண்டு குருபூஜை கடந்த 9.12.09 அன்று நடந்துள்ளது. ஆண்டவர் சுவாமிகளின் பக்தர்களுக்கு இது ஒரு மாபெரும் திருவிழா.

ஆடு மாடுகள் மேய்த்து, வயல்வேலைகளைப் பார்த்து வந்த குடும்பம். இறைவன் முத்துகருப்பய்யாவை ஆட்கொள்ள வேண்டிய வேளையும் வந்தது. கொங்கிவயல் கிராமத்துக்கு அருகே ஒரு சாயபு வசித்து வந்தார். இவர் பார்க்கத்தான் சாதாரணமாக இருப்பாரே தவிர, இறை அருள் நிரம்ப பெற்றவர். பல ஸித்துக்கள் கைவரப் பெற்றவர். இது கொங்கிவயல் கிராமத்தில் வசிக்கும் பலருக்கேகூடத் தெரியாது கிராமத்தில் வசிக்கும் குடிமக்களின் வீட்டு வாசலில் நின்று பிச்சை எடுத்து உண்பார். பலரும் இவருக்கு ஒரு பிடி அரிசியும் ஒரு பைசா நாணயமும் கொடுப்பர். இதை வழக்கமாகக் கொண்ட பல குடிமக்களும் உண்டு. இப்படிப் பிச்சையாகக் கிடைத்ததை வைத்து கிராமத்தின் ஒரு எல்லையில் அவற்றைச் சமைத்து உண்பார். அதோடு, எஞ்சி இருக்கும் உணவை அந்த வழியே செல்லும் மற்ற மக்களுக்கும் வழங்குவார்.

ஒரு நாள் இந்த சாயபு. முத்துகருப்பய்யா வீட்டு வாசல் வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அன்றைய தினம் முத்துகருப்பய்யா வீட்டில் உள்ள அனைவரும் படு சோகமாக இருந்தனர். காரணம், அவர்கள் வீட்டில் வளர்ந்து வந்த ஆட்டுக்குட்டி ஒன்று திடீரென இறந்துவிட்டது. வீட்டில் சோகமாக அமர்ந்திருந்த முத்துகருப்பய்யாவைத் தன் அருகே அழைத்த சாயபு, சோகத்துக்கான காரணம் கேட்டார். அதற்கு முத்துகருப்பய்யா, எங்க வீட்டில் ஆசையா வளர்த்த ஆட்டுக்குட்டி திடீர்னு செத்துப் போச்சு. அதான் வீட்டில் இருக்கிற எல்லாரும் சோகமாக இருக்காங்க என்றார்.

இதான விஷயம்..... என்று இயல்பாகக் கேட்ட சாயபு. உள்ளே வந்தார். செத்துப் போய்த் தரையில் கிடந்த ஆட்டுக்குட்டியைப் பார்த்தார். பிறகு, அதன் மீது தன் வலக்கையை வைத்துத் தடவினார். என்னே ஆச்சரியம்.... செத்துப் போய் பல மணி நேரங்கள் ஆன அந்த ஆட்டுக்குட்டி அடுத்த விநாடியே துள்ளலுடன் எழுந்து. குதித்தோடியது சாயபு. வெகு சாதாரணமாக அங்கிருந்து போய்விட்டார். வீட்டில் உள்ள பலரும் இதை ஆச்சரியத்தோடு பார்க்க.... முத்துகருப்பய்யா மட்டும். எப்படி அவரால் இது சாத்தியமாயிற்று? என்று குழம்ப ஆரம்பித்தார். துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டியைப் பிடிப்பதை விட்டு விட்டு. சாயபுவை அவர் போன திசையில் பின்தொடர ஆரம்பித்தார்.

கிராமத்தை விட்டு வெகு தூரம் நடந்த சாயபு. தன்னைப் பின் தொடர்ந்து வரும் முத்துகருப்பய்யாவைப் பார்த்து. அதான் உன் வீட்டு ஆட்டுக்குட்டி பிழைச்சுடுச்சுல்ல... அப்புறம் ஏன் என் பின்னால் வாறே? என்று சற்று கோபமாகக் கேட்டார். அதற்கு சிறிது தயக்கத்துடன், நான் உங்க கூடவே இருக்க ஆசைப்படுறேன் என்றார் முத்துகருப்பய்யா, சட்டென்று விரட்டினார் சாயபு. அவரின் கோபத்துக்கும் மிரட்டலுக்கும் பயந்து முத்துகருப்பய்யா பின்வாங்கினார்.ஆனால், இது அன்றோடு முடிந்துவிட்ட விஷயம் இல்லை. அடுத்த நாளும் சாயபுவைத் தேடிக் கண்டுபிடித்து, அவரைப் பின்தொடர்ந்து செல்வார். சாயபுவின் விரட்டுதல் தொடரும். இப்படி ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.... சுமார் பதினைந்து நாட்கள் விடாமல் சாயபுவைப் பின்தொடர்ந்தும் பலன் இல்லை. அன்று முத்துகருப்பய்யாவைப் பார்த்து சாயபு சொன்னார். நீ எல்லாம் குடும்பஸ்தன். என் பின்னால் வரக் கூடாது. என் வாழ்க்கையே வேறு மாதிரி. உனக்கான வாழ்க்கையை நீ பார்த்து கொள். இது போல் சாயபு பல சால்ஜாப்புகள் சொல்லியும் முத்துகருப்பய்யா மசியவில்லை. முத்துகருப்பய்யாவின் மனோதிடத்தைச் சோதிக்க சாயபு எடுத்துச் கொண்ட காலம் இது என்றுகூட அவருடைய பக்தர்கள் சொல்வார்கள்.

இதன் பின்னாலும் மனம் தளராமல் சாயபுவை முத்துகருப்பய்யா பின்தொடர... ஒரு நாள் முகம் மலர்ந்த சாயபு, முத்துகருப்பய்யாவுக்கு உபதேசம் செய்து தன் சீடனாக அங்கீகரித்தார். கிராமத்தில் இருந்து சற்றே தள்ளி இருக்கும் காட்டுப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று, பல கலைகளையும் கற்றுக் கொடுத்தார். இருந்தாலும், எப்போதும் தன்னுடன் இருக்க முத்துகருப்பய்யாவை சாயபு அனுமதிக்கவில்லை. அதனால், சாயுபுவுடன் இருக்கும் நேரம் தவிர, மற்ற பொழுதுகளில் சாதாரண குடும்பஸ்தனாகத் தன் வீட்டிலே இருந்து வந்தார் முத்துகருப்பய்யா. ஆனால் சாயபுவுடன் தனக்கு இருக்கும் தொடர்பு பற்றி வீட்டில் எவருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டார் முத்துகருப்பய்யா. (பின்னாளில் இந்த சாயபு சமாதி ஆன பிறகு, கொங்கிவயலில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள பெரியகாரை என்னும் ஊரில் அடக்கமானார்.)

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி இருக்கும்? முத்துகருப்பய்யாவின் யோகக் கலை அவரது வீட்டாருக்குத் தெரிய வேண்டிய வேளையும் வந்தது. ஒரு நாள் வீட்டில் எவரும் இல்லாத வேளையில் கடும் தவத்தில் ஆழ்ந்தார் முத்துகருப்பய்யா. இவரது தவத்தின் வெளிப்பாடாக அக்னி சுடர் வீட்டு ஜோதிமயமாக எழுந்தது. ஒரு கட்டத்தில் முத்துகருப்பய்யாவின் வீடே தீப்பிடித்து எரிந்தது. அதே சமயம், இவை எதையும் அறியாமல் வீட்டின் உள்ளே முத்துகருப்பய்யாவின் தவமும் தொடர்ந்தது. அப்போது வயல் வேளையில் இருந்து யதேச்சையாக முன்கூட்டியே வீடு திரும்பிய முத்துகருப்பய்யாவின் தாயார், தன் வீடு தீப்பிடித்து எரிவது கண்டு அலறினார். ஐயையோ.... எம் மகன் முத்துகருப்பன் உள்ளே இருக்கானே.... வீடு இப்படித் தீப்பிடித்த எரியுதே.... என்று பெரும் குரல் எடுத்துக் கதற... வெளியே தன் தாயின் அலறல் ஓசை கேட்டு, தவத்தில் இருந்து மீண்டு கண் விழித்தார். முத்துகருப்பய்யா, அப்போது அவரது முகம் ஜோதி பிரகாசமாக ஜொலித்தது.

முத்துகருப்பய்யா கண் விழித்த அடுத்த கணமே அதுவரை கொழுந்து விட்டு எரிந்த தீ. பொசுக்கென்று சுவடே இல்லாமல் மறைந்து போனது. தாயார் மிரண்டு போனார். இது என்ன விசித்தரமா இருக்கு. முத்துகருப்பன் கண் விழிச்சதும். தீ இருந்த இடம் தெரியாமல் மறைஞ்சிடுச்சே... என்று யோசித்தவருக்கு. உண்மை புரிந்தது. தன் மகனிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருக்கிறது.... அதுதான் இப்படி வேலை செய்திருக்கிறது என்று தெளிந்தார். தாயின் முகத்தில் தெரியும் மாற்றத்தை உணர்ந்த முத்துகருப்பய்யா, அம்மா... இங்கே நீ கண்ட இந்த அற்புதத்தை எவரிடமும் சொல்லக் கூடாது. உரிய வேளை வரும்போது எல்லாமே தெரிய வரும் என்று கேட்டுக்கொண்டார். இவன் மகனா... மகானா? என்கிற பிரமிப்புடன் சரி என்பது போல் தலை அசைத்தார் அந்தத் தாய்.

இதில் இருந்து மகனை தெய்வமாகவே நினைக்க ஆரம்பித்தார் அந்தத் தாய் நாட்கள் செல்ல செல்ல, முத்துகருப்பய்யாவின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. நாட்டு ஓடு வேய்ந்த சாதாரண ஒரு மண்சுவர் வீடுதான் அவருடையது. அங்கேயே ஒரு மூலையில் நினைத்தபோது தவம் இருப்பார். குடுமி வைத்திருப்பார். சிவப்பு நிறத்தில் வேஷ்டியும் மேல்துண்டும் அணிந்திருப்பார். வெளியில் செல்லும்போது பெரும்பாலும் வெறும் கால்களுடன்தான் செல்வார். எப்போதாவது கால்களில் பாதக் கட்டைகளை அணிந்து கொள்வார். முத்துகருப்பய்யாவின் அருமை பெருமைகள் அறிந்து சிலர் இவரை ஆண்டவர் சுவாமிகள் என்றே அழைக்க ஆரம்பித்தனர். இனி, நாமும் ஆண்டவர் என்றே முத்துகருப்பய்யாவைப் பார்ப்போம்.

தேவகோட்டையைச் சேர்ந்த சுப்பையா செட்டியார் என்பவர். ஆண்டவரின் பக்தர். அவ்வப்போது கொங்கிவயலுக்கு வந்து ஆண்டவரிடம் பேசிவிட்டுச் செல்வார். அன்றைய தினம் பங்குனி உத்திரம். ஆண்டவரைப் பார்ப்பதற்காக கொங்கிவயலில் அவருடைய வீட்டுக்கு வந்திருந்தார் சுப்பையா. ஏனோ அன்று சுப்பையாவின் முகம் வாட்டமாக இருந்தது. இதைத் அறிந்து ஆண்டவர். என்ன செட்டியாரே.... மனசுல ஏதோ ஓடிட்டிருக்கு போலிருக்கு? என்று கேட்டார். அதற்கு ஆமாம். ஆண்டவரே.... இன்னிக்கு பங்குனி <உத்திரம் குன்றக்குடியில் வெள்ளி ரதத்தில் இந்நேரம் முருகப் பெருமான் வலம் வந்திருட்டிருப்பார். போகணும்னு ஆசை. ஆனா, முடியலை என்றார். கொங்கிவயலில் இருந்து குன்றக்குடிக்கு சுமார் 30 கி.மீ தொலைவு இருக்கும் அந்தக் காலத்தில் பேருந்து வசதி எல்லாம் கிடையாது. மாட்டு வண்டிப் பயணம்தான். அன்றைக்கென்று பார்த்து குனறக்குடி செல்வதற்குத் தோதான எந்த ஓரிரு வாய்ப்பும் சுப்பையாவுக்குக்  கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்தில் இருந்தார்.

அந்த வேளையில் ஆண்டவர் சிரித்தார். என்ன செட்டியாரே... இப்ப உமக்கு குன்றக்குடி போகணும் வெள்ளி ரதத்துல உலா வர்ற முருகப் பெருமானை தரிசிக்கணும். அவ்ளோதானே? என்று கேட்டார். சுப்பையா செட்டியார் முகம் மலர்ந்தார். இதைத் தவிர வேறு என்ன சந்தோஷம் அவருக்கு இருக்க முடியும்? ஆமாம் ஆண்டவரே.... ஆனால் எப்படிப் போவது? முகத்தில் சந்தேகம். சரி.... பெரியகாரை ஊர் பக்கம் பனங்காட்டான் வயலில் ஆசாரி வீட்டில் இரு என்று சொல்லி சுப்பையா செட்டியாரை முதலில் அனுப்பினார். பின்னாலேயே சில நிமிடங்கள் கழித்துத் தொடர்ந்து சென்றார் ஆண்டவர். பிறகு, அந்த ஆசாரியின் வீட்டில் இருந்து இருவரும் புறப்பட்டு அருகில் இருந்த கண்மாய்க் கரையை அடைந்தனர். தரையில் ஒரு துண்டை விரித்து சப்பையாவை அதில் அமரச் சொல்லிவிட்டுத் தானும் அமர்ந்துகொண்டார் ஆண்டவர். செட்டியாரே.... கண்ணை மூடிக்குங்க. நான் திறக்கச் சொல்றப்பதான் திறக்கணும் என்றார் ஆண்டவர். செட்டியாரும் கண்களை மூடிக் கொண்டார்.

அடுத்த விநாடியே, செட்டியாரே.... கண்ணைத் திறந்து பாருங்க என்ற ஆண்டவரின் குரல் கேட்டு, கண்களைத் திறந்து பார்த்த சுப்பையாவுக்கு நம்பவே முடியவில்லை. குன்றக்குடியில் ஒரு ஊரணிக்கரையில் இருவரும் இருந்தார்கள். கண்ணுக்கு நேரே திருவிழா. குன்றக்குடியே ஜே ஜேவென்று இருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் முருக கோஷம். மேளதாளம். வேட்டு முழக்கம். திருவிழாக் கடைகள். வெள்ளி ரதத்தில் முருகப் பெருமான் கன ஜோராக வலம் வந்து கொண்டிருந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்த அந்த உருக்கமான காட்சியைப் பார்த்த மறுகணம் சுப்பையாவின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர் வடிந்தது. ஆண்டவரின் கைகளைப் பிடித்து, பயபக்தியோடு தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். அதன் பிறகு, தரிசனம் முடிந்து. பிரசாதம் பெற்று, பலகாரங்களை வாங்கிக்கொண்டு இருவரும் சாலை வழியே கொங்கிவயல் திரும்பினர். பெரியகாரை ஆசாரிக்கும் மறக்காமல் பலகாரம் வாங்கி வைத்துக் கொண்டார் ஆண்டவர்.

இப்படி ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு ஆகாய மார்க்கமாகப் பயணிக்கும் யோகக் கலையை நன்கறிந்திருந்தார் ஆண்டவர். இந்த யோகத்தின் மூலம் நாகூர், சிலோன் போன்ற இடங்களுக்கும் பயணப்பட்டிருக்கிறார். அவ்வப்போது சிலரிடம் உத்தியோகமும் புரிந்திருக்கிறார் ஆண்டவர், வீட்டாரைத் திருப்திப்படுத்தவும். அவர்களுக்கு உதவவும் இதை சுவாமிகள் செய்து வந்தார் என்கிறார்கள் ஆண்டவரின் பக்தர்கள். இப்படி ஒரு முறை தேவகோட்டையில் வைர வியாபாரியாக இருந்த செட்டியார் ஒருவரிடம் ஊழியம் புரிந்திருக்கிறார் ஆண்டவர். வைரத்தைச் சோதிப்பதில் தேர்ந்திருந்தார் ஆண்டவர். அதோடு, அந்த செட்டியாரிடம் கணக்குப்பிள்ளையாக இருந்தார். செட்டியாருக்கு இலங்கை, இந்தோனேஷியா, பர்மா போன்ற வெளிநாடுகளில் எல்லாம் வைர வியாபாரம் அமோகமாக நடந்து வந்தது.


குறிப்பிட்ட ஒரு நாளில் தேவகோட்டையில் செட்டியார் வீட்டின் தரைத் தளத்தில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஆண்டவர். அந்த நேரத்தில் செட்டியார் மாடியில் படபடப்புடன் அமர்ந்து கொண்டிருந்தார். செட்டியாரின் படபடப்புக்குக் காரணம் - அன்றைய தேதியில் இவர் வியாபாரம் சம்பந்தப்பட்ட இரு வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருப்பதுதான். செட்டியார் நியாயமாகத்தான் இருந்தார். ஆனாலும், தொழிலில் அவருக்கு வேண்டாத சிலர் செட்டியாரை அவமானப்படுத்தவும். நஷ்டப்படுத்தவும் வேண்டி இந்த வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்கள். இந்த இரு வழக்குகளில் ஒன்று இலங்கை நீதிமன்றத்திலும். இன்னொன்று இந்தோனேஷிய நீதிமன்றத்திலும் நடந்து கொண்டிருந்தது. அதுவரை நடந்த விசாரணைகளை வைத்துப் பார்க்கும்போது, தீர்ப்பு செட்டியாருக்கு பாதகமாகவே போய்க்கொண்டிருந்தது.

வழக்கு விசாரணைகள் முடிந்து அன்று தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள். தனது உதவியாளர்கள் அங்கிருந்து சொல்லப் போகும் தகவலுக்காகத் தொலைபேசி அருகிலேயே பதற்றுத்துடன் அமர்ந்திருந்தார். செட்டியார். இவர் பக்கம் சாதகமாக முடிந்தால், பல லட்சங்களை இழக்காமல் தவிர்க்கலாம். தோற்றுப் போனால் பெருத்த நஷ்டம் விளையும் இதனால். இருப்புக் கொள்ளாமல் பரந்த அந்த ஹாலில் குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டிருந்தார் செட்டியார். திடீரென தொலைபேசி மணி ஒலித்தது.

பரபரப்புடன் ஓடிப் போன செட்டியார் ரிசீவரைக் கையில் எடுத்து, ஹாலோ சொன்னார் ஐயா.... நான் கொழும்புலேர்ந்து பேசுறேன் நீதிமன்றத்தில் விசாரணை முடிஞ்சு தீர்ப்பை சொல்லிவிட்டாங்கய்யா, நம்ம பக்கம் சாதகமாக தீர்ப்பாயிடுச்சுங்கய்யா என்றார் பேசியவர் சந்தோஷமாக.

அப்படியா.... என்று செட்டியாரால் நம்பவே முடியவில்லை நெஜமாத்தான் சொல்றியா..... நம்ம பக்கம் தீர்ப்பு ஆயிடுச்சா? என்று மீண்டும் ஒரு முறை சந்தேகமாகக் கேட்டார்.

ஆமாங்கய்யா... நம்ம முத்துகருப்பய்யாதான் கடைசியில் வந்து ஏதோதோ விவரத்தை ஜட்ஜ் ஐயாகிட்ட சொல்ல... அவர் அதை எல்லாம் குறிப்பு எடுத்து. தீர்ப்ப நமக்கு சாதகமா சொல்லி இருக்காருய்யா... முத்துகருப்பய்யா மட்டும் இன்னிக்கு கோர்ட்டுக்கு வரலேன்னா.. கஷ்டம்தான்யா.

செட்டியார் ஆடிப் போனார். எந்த முத்துகருப்பய்யாவைச் சொல்றே?

அதான்யா...  கொங்கிவயல்காரர். அந்த முத்துகருப்பய்யாதான். நம்ம கணக்குபிள்ளை.

இப்ப முத்துகருப்பய்யா, சிலோன் கோர்ட்லயா இருக்கான்?

என்னய்யா இப்படிக் கேட்டுப்புட்டீங்க? நீங்கறே அனுப்பிச்சதால்ல நாங்க நினைச்சிட்டிருக்கோம். இப்பதானே நீதிமன்றத்துலேர்ந்து வெளியில் போனார் முத்துகருப்பயா.

சரி. நீ போனை வெச்சுடு என்று சொன்ன செட்டியார், ரிசீவரை வைத்துவிட்டு, மாடியில் இருந்து குனிந்து கீழே பார்த்தார்.

அங்கே மும்முரமாக அமர்ந்து, கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் - இலங்கையில் சற்று முன் சாட்சி சொன்ன கொங்கிவயல் முத்துக்கருப்பய்யா.

செட்டியாருக்கு உடலெல்லாம் வியர்த்தது. முத்துகருப்பய்யாவின் ஸித்து வேலைகள் பற்றி அவ்வப்போது ஓரிரு சமாசாரங்களை அதுவரை அவர் கேள்விப்பட்டிருந்தாலும், நேருக்கு நேராக இப்போது உணர்ந்துகொண்டார். முத்துகருப்பய்யாவின் மேல் செட்டியாருக்கு உள்ள மதிப்பு இன்னும் கொஞ்சம் உயர்ந்தது.

இரண்டு வழக்குகளில் ஒன்று நமக்கு சாதகமாக முடிந்து விட்டது. அடுத்து, இந்தோனேஷிய நீதிமன்றத்தில் இருந்து என்ன தகவல் வரப் போகிறதோ? என்று செட்டியார் தவித்துக் கொண்டிருந்தபோது, அருகில் உள்ள தொலைபேசி கிணுகிணுத்தது.

மனம் பதறியபடியே எடுத்த செட்டியார், ஹலோ என்றார், தவிப்பாக.

ஐயா.... நான் இந்தோனேஷியாவில் இருந்து பேசறேன், கோர்ட்டில் நம்ம வழக்குல தீர்ப்பு சொல்லிட்டாங்கய்யா....

சொல்லு..... என்ன தீர்ப்பு? என்றார் செட்டியார் படபடப்பாக.

ஐயா..... நீ கவலைப்படும்படியா ஒண்ணும் இல்லீங்கய்யா, நமக்கு சாதகமாத்தான் தீர்ப்பு வந்திருக்கு சந்தோஷமான விஷயம்தான் ஐயா என்றார் அந்த ஊழியர்.

அப்படியா என்று பெருமூச்செறிந்தவர், நம்ம கம்பெனி ஆட்களுக்கெல்லாம் உடனே ஸ்வீட் வாங்கிக் கொடுய்யா என்றார் அதிகாரமாக.

அதெல்லாம் இருக்கட்டும்யா...... நம்மகிட்ட வேலை பாக்கிற கணக்குப்பிள்ளை முத்துகருப்பய்யா மட்டும் இன்னிக்கு கோர்ட்டுக்கு வந்து சில தகவல்களைச் சொல்லலேன்னா, தீர்ப்பு நமக்கு எதிரா போயிருக்கும்யா என்றவரை இடைமறித்தார் செட்டியார்.

என்னது.... முத்துகருப்பய்யாவா? நமக்கு கணக்குப்பிள்ளையா? அவன் எப்படி அங்கே வந்தான்? என்றார் செட்டியார், அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.

என்னங்கய்யா... நீங்க அனுப்பிச்சுதான் அவர் வந்ததா நாங்க நினைச்சிட்டிருக்கோம்.....

அப்போது-கீழே தரைத் தளத்தில் அமர்ந்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்த முத்துகருப்பய்யா, ஏதோ விளக்கம் கேட்பதற்காக, ஒரு தஸ்தாவேஜை எடுத்துக் கொண்டு மாடிப்படி ஏறி வந்து செட்டியார் முன்னால் நின்று கொண்டிருந்தார்.

செட்டியார் திக்பிரமையோடும், வியப்போடும் முத்துகருப்பய்யாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தன் எதிரே ஒரு தஸ்தாவேஜுடன், வெகு இயல்பாக நின்றுகொண்டிருக்கும் ஆண்டவரை (முத்துகருப்பய்யா) பார்த்து அதிர்ந்துபோய் நின்றார் தேவகோட்டை செட்டியார்.

ஆண்டவரின் அற்புதங்களை - சித்து விளையாட்டுகளை கண நேரத்தில் புரிந்துகொண்டுவிட்ட செட்டியாருக்கு. அந்த நேரத்தில் ஆண்டவர். சாட்சாத் ஆண்டவனாகவே தெரிந்தார். ஆண்டவரிடம் எதுவும் பேசத் தோன்றாமல், பொசுக்கென கால்களில் விழுந்தார் செட்டியார். ஆண்டவர் நெளிந்தார்.

செட்டியாரின் கண்களில் இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது. ஐயா.... எவ்ளோ பெரிய மகான் நீங்க? இவ்ளோ உசந்த உங்கøளை. ஒரு சாதாரண ஊழியனா எங்கிட்ட வெச்சு. சம்பளம் கொடுத்து... ச்சே! நினைச்சாலே என் உடம்பு கூசுது. உங்களுக்கு என்ன வேணும் கேளுங்க.... தங்கம் வேணுமா? வைரம் வேணுமா? வீடுவாசல் வேணுமா? எதாவது உங்களுக்கு செஞ்சாதான் என் மனசு ஆறும்!.... உணர்ச்சிவசப்பட்டவராக செட்டியார் பேசினார்.

ஆண்டவர் அமைதியாக இருந்தார்.

உங்களுக்கு இனிமேலும் மாசாமாசம் சம்பளம் குடுத்து ஒரு சாதாரண ஊழியனா வெச்சிருக்க எனக்கு விருப்பமில்லே. உங்களோட அற்புதங்கள் எனக்கு மட்டுமே சொந்தமாகக் கூடாது. உலகமே அதை அனுபவிக்கணும் - செட்டியார் படபடப்பாகப் பேசினார்.

ஆண்டவர் திருவாய் மலர்ந்தார். ஐயா.... உங்களோட உப்பை நான் சாப்பிடணும் அவ்வளவுதான். எனக்கு மாசாமாசம் சம்பளம் மட்டும் குடுங்க. அதுவேபோதும் என்று சொல்லி படியிறங்கி வீட்டுக்குப் புறப்பட்டு வந்துவிட்டார் ஆண்டவர்.

ஆனால் இதன்பின் ஆண்டவர், தேவகோட்டை செட்டியார் வீட்டுக்குப் போவதை நிறுத்திவிட்டார். ஆண்டவரின் மகிமை குறித்துக் கேள்விப்பட்ட பலரும் அவரைத் தேடி வர ஆரம்பித்தார்கள். ஆனால், எவரெவருக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டுமென்று ஆண்டவர் தீர்மானிக்கிறாரோ, அவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிடைத்தது.

கொங்கிவயலுக்கு அருகிலுள்ள எழுவங்ககோட்டையில் வசித்து வந்தவர் முத்து ஸ்தபதி. தற்போது கோயில்க் கட்டுமானப் பணிகளின் பிரபலமாக இருக்கும் கணபதி ஸ்தபதி, சட்டநாதன் ஸ்தபதி. முத்தையா ஸ்தபதி மற்றும் சண்முகம் ஸ்தபதியின் தந்தைதான் முத்து ஸ்தபதி.

அப்போது முத்து ஸ்தபதிக்கு வயசு சுமார் நாற்பது இருக்கும் ஆனால், புத்திர பாக்கியம் இல்லை. முத்து ஸ்தபதியின் அண்ணனான சிவன் ஸ்தபதிக்கும் வாரிசு இல்லை.

தங்களது கோரிக்கையையும் பிரார்த்தனையையும் இறைவனிடம் முன் வைப்பதற்காக ஒரு மகா சிவராத்திரி தினத்தில் கொங்கிவயலுக்கு அருகிலுள்ள கோட்டூர் நயினார் கோயிலுக்குச் சென்றார்கள் இருவரும். இவர்களது பாட்டன்மார்கள் கட்டிய கோயில் அது. அங்கு இறைவனை வணங்கிவிட்டு நடந்தே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். வரும் வழியில் அண்ணன் சிவன் ஸ்தபதியும் தம்பி முத்து ஸ்தபதியும் தங்களுக்கு வாரிசு இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டே வந்தனர். அப்போது சிவன் ஸ்தபதி. இங்கே கொங்கிவயலில் ஒரு சாமி (ஆண்டவர்) இருக்கிறார். வா அவர்களைப் பார்த்துவிட்டு ஆசி வாங்கி வருவோம் என்றார். அதன்படி இருவரும் கொங்கிவயலில் ஆண்டவர் சுவாமிகளின் வீட்டுக்குச் சென்றனர்.

ஆண்டவரும் அப்போது வீட்டில் இருந்தார். இருவரும் ஆண்டவரை நமஸ்கரித்து. குழந்தை பாக்கியம் இல்லாதது குறித்துக் கேட்டனர். அப்போது சிவன் ஸ்தபதிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்றும், முத்து ஸ்தபதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்றும் சொன்னார் ஆண்டவர். அதுவும், அடுத்த மகா சிவராத்திரியின்போது முத்து ஸ்தபதியை மட்டும் தன் இடத்துக்கு வருமாறும் அந்த நேரத்தில் அவருக்கு அருள்வதாகவும் ஆண்டவர் சொன்னார்.

ஆண்டவரின் திருவாக்குக்கான விளக்கம் அப்போது இருவருக்கும் புரியவில்லை. அடுத்த மகா சிவராத்தியன்று நீ மட்டும் வா என்று ஆண்டவர் சொன்னதன் பொருள், சிவன் ஸ்தபதி அடுத்த மகா சிவராத்திரிக்குள் திடீரென இறந்துவிட்ட பிறகுதான் முத்து ஸ்தபதிக்குப் புரிந்தது.

அடுத்த மகா சிவராத்திரியன்று முத்து ஸ்தபதி மட்டும் கோட்டூர் நயினாரைத் தரிசித்துவிட்டு, கொங்கிவயல் சென்றார். ஆண்டவரும் தன் வீட்டில் இருந்தார். வா, முத்து.... உன் அண்ணனுக்கு ஆயுள்பலம் இல்லை. அதனால்தான் உன்னை மட்டும் இந்த மகா சிவராத்திரிக்கு வரச் சொன்னேன். உனக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. ஆனால்... - ஆண்டவர் நிறுத்தினார்.

என்ன சாமீ ..... முத்து ஸ்தபதி பதற்றமானார்.

வேற ஒண்ணுமில்லே. நீ ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கணும் என்றார்.

முதல் மனைவியுடன் இல்லறம் இனிமையாகப் போய் கொண்டிருக்கும்போது எப்படி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்வது என்று குழம்பினார் முத்து ஸ்தபதி. இதன்பிறகு ஒரு நாள் முதல் மனைவி பார்வதியுடன் ஆண்டவரைத் தரிசிக்க வந்தார் முத்து ஸ்தபதி. பார்வதியை ஆசிர்வதித்த ஆண்டவர். உன் கணவனுக்கு நீயே இரண்டாவது கல்யாணம் செய்து வை. உனக்கும் பின்னாளில் ஒரு வாரிசு பிறக்கும் என்று அருளினார்.

ஆண்டவரின் வாக்குக்கும் ஆசிர்வாதத்துக்கும் கட்டுப்பட்ட பார்வதி. தன் கணவர் முத்து ஸ்தபதிக்கு மகிழ்ச்சியுடன் இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். இரண்டாவது மனைவியாக முத்து ஸ்தபதிக்கு அமைந்தவர் கவுரி என்கிற நங்கை.

பிற்காலத்தில் கவுரிக்கு கணபதி ஸ்தபதி. முத்தையா ஸ்தபதி. சண்முகம் ஸ்தபதி ஆகிய மகன்களும் சொர்ணம். கமலம் ஆகிய மகள்களும் பிறந்தனர். இந்தக் காலகட்டத்தில் முத்து ஸ்தபதியின் முதல் மனைவி பார்வதிக்கு ஆண்டவர் கொடுத்த வாக்கும் பலித்தது. ஆம்! திருமணமாகி பல வருடங்கள் கழித்து பார்வதிக்கு சட்டநாதன் என்கிற திருமகன் பிறந்தான்.

பின்னாளில் ஆண்டவர் சுவாமிகளின் அத்யந்த பக்தரானார் முத்து ஸ்தபதி. இவரையே தன் குருவாக பாவித்தார். ஆண்டவரும் முத்து ஸ்தபதியும் அடிக்கடி சந்தித்து உரையாடுவார்கள். முத்து ஸ்தபதிக்கு ஆண்டவர் அருளிய ஒரு நிகழ்வும் நடந்தது.

ஒரு நாள் ஆண்டவரின் வீட்டுக்குச் சென்றார் முத்து ஸ்தபதி, அப்போது ஆண்டவர் தரையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். முத்து ஸ்தபதியையும் தன் அருகே அமர வைத்து மருமகளைக் கூப்பிட்டு. முத்துவுக்கும் ரெண்டு இட்லி கொண்டுவந்து வை என்றார். அந்த அம்மாளும் முத்து ஸ்தபதிக்கு ஒரு இலையைப் போட்டு, இரண்டு இட்லியை வைத்துவிட்டுப் போனார். தொட்டுக்கொள்ள ஏதாவது கொண்டுவந்து வைப்பார்கள் என்று முத்து ஸ்தபதி, ரொம்ப  நேரம் சாப்பிடாமலே இருந்தார். ஆனால், அந்த அம்மாள் திரும்பி வரவே இல்லை.

இப்போதுதான் ஆண்டவரின் அனுக்கிரகம் முத்து ஸ்தபதிக்குக் கிடைத்தது. வெறும் இட்லியை ரொம்ப நேரம் சாப்பிடாமல் இருந்த முத்து ஸ்தபதியை என்ன என்பதுபோல ஆண்டவர் பார்த்தார். சாமீ...  நீங்க தொட்டுக்கற சீனியில் (சர்க்கரை) இருந்து எனக்குக் கொஞ்சம் உத்தரவாக வேண்டும். என்று பவ்யமாகக் கேட்டார். அதன்பின் ஆண்டவர், தான் எச்சில்  பண்ணிச் சாப்பிட்ட சீனியில் கொஞ்சமும் உதிரிந்த இட்லியையும் முத்து ஸ்தபதியின் கையில் போட்டார். அதை பகவானின் அருட்பிரசாதமாக எண்ணி, ஆனந்தமாகச் சாப்பிட்டார். இதன்பின் ஆண்டவரின் பரிபூரண அருளுக்குப் பாத்திரமானார் முத்து ஸ்தபதி.

முத்து ஸ்தபதியின் (கவுரி அம்மாளுக்குப் பிறந்த) மூத்த மகனான கணபதி ஸ்தபதி நம்மிடம் சொன்னார். ஆண்டவருடன் ஏற்பட்ட நெருக்கம். என் தந்தையை உயர்ந்த அளவுக்குக் கொண்டு சென்றது அவரது வாரிசுகளான நாங்கள் இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறோம். என்றால், அது முத்துகருப்பய்யா ஆண்டவரின் அருள்தான் என்றவர். தனக்கு நேர்ந்த ஓர் அனுபவம் பற்றிச் சொன்னார்.

நான் அஞ்சு வயசுப் பையனா இருந்தப்போ, ஒருமுறை விளையாட்டுத்தனமா ஒரு நாயோட வாலைப் பிடிச்சு இழுத்து சேஷ்டை பண்ணிட்டிருந்தேன். ரெண்டு தடவை அந்த நாய் சும்மாவே இருந்திச்சு. ஆனா, மூணாவது தடவை வாலைப் பிடிச்சு இழுத்தப்ப அது என்னோட இடது மணிக்கட்டுல சுரீர்னு கடிச்சிடுச்சு. வலி பொறுக்க முடியாம கதற ஆரம்பிச்சுட்டேன். என்னோட அப்பாவும் அம்மாவும் பதறியடிச்சு ஓடி வந்தாங்க.

அப்பல்லாம் ஏது வைத்தியம்? நாய் கடிச்ச இடத்தில் சுண்ணாம்பைத் தடவி விட்டாங்க. ஆனா, சரியா கவனிக்காததாலும் கடிபட்ட இடத்தில் தண்ணி பட்டதாலும் சீழ் பிடிச்சிடுச்சு. தேவகோட்டை ஆஸ்பதிரிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஒண்ணும் சரிப்பட்டு வரலை. செப்டிக் ஆயிடுச்சு. வலியும் வேதனையும் அதிமாயிடுச்சு. மதுரைக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லி தேவகோட்டை டாக்டருங்க சொல்லிட்டாங்க. இடது கையை கொஞ்சமும் அசைக்கவே முடியலை அப்படிப்பட்ட ஒரு அவஸ்தை.

மதுரைக்கு போனாலும் கை சரியாகுமானு வீட்டில் எல்லாருக்கும் கவலை. அப்பதான் எங்கப்பாவுக்கு ஆண்டவர் ஞாபகம் வந்திச்சு. அப்பாவும் அம்மாவும் என்னைத் தூக்கிட்டு கொங்கிவயல் ஆண்டவர்கிட்ட போனாங்க. சாமீ... உங்க அனுக்கிரக்தால் பொறந்த புள்ளை. இப்படி ரொம்ப நாளா படாத பாடு படறான்னு மொத்த விஷயத்தையும் ஆண்டவர்கிட்டே சொல்லி எங்கப்பா அழுதாரு.

ஆண்டவர் சிரிச்சுக்கிட்டே என்னைப் பார்த்து என்னடா பண்ணே..? தெருவில் நாய் சும்மா இருந்ததுன்னு அதனோட வாலைப்பிடிச்சு இழுத்தியா? ன்னு கேட்டாரு. ஆமான்னு அழுதுகிட்டே சொன்னேன். கடிபட்ட இடத்தில் வாயால ஊதி. மெள்ளத் தடவி விட்டார். வீட்டுக்குப் போனதும் செஞ்சந்தனக்கட்டைய கடிப்பட்ட இடத்துல இழைச்சுப் போடுன்னு சொன்னவர். நாங்க கௌம்பறப்ப, ஒண்ணும் போட வேணாம். சரியாயிடும் னார். ஆண்டவர்கிட்ட போனா எல்லாம் சரியாயிடும்னு நினைச்சு என்னைக் கூட்டிட்டு வந்த எங்கப்பாவுக்கு இதில் திருப்தியே இல்லே. வீட்டுக்குத் திரும்பி வர்ற வழியில எங்க அம்மாவோ, ஏங்க... புள்ளை துடிக்கறதைப் பாத்தா பாவமா இருக்கு. பேசாம மதுரை ஆஸ்பதிரிக்கே கூட்டிட்டுப் போயிடலாமா?ன்னு கேட்டாங்க. எங்கப்பாவுக்கு என்ன பதில் சொல்றதுன்னு புரியலை.

வீட்டுக்குப் போற வழியில் ஒரு ஆறு ஓடிட்டிருக்கும் சாதாரணமா இந்த வழியில் கடந்து போறவங்க. சுமை எல்லாத்தையும் இறக்கி வெச்சுட்டு, இந்த ஆத்துத் தண்ணில் முகம் கழுவுவாங்க. அதனால், என்னைத் தூக்கிவிட்டு வந்த எங்கம்மா, கீழ இறக்கி விட்டுட்டு முகம் கழுவினாங்க.

அதுவரைக்கும் மடிச்ச நிலையே ஆடாம அசையாம இருந்த என் இடக்கை. மெள்ளக் கீழ எறங்கிடுச்சு. அதுவரைக்கும் இருந்த வலி. பொசுக்குன்னு க்ஷண நேரத்தில் மறைஞ்சு போச்சு. என்ன அதிசயம்னே புரியலை. முகம் கழுவிட்டு கரைக்கு வந்த அம்மா. என் இடக்கை வெகு சாதாரணமா இருக்கிறதைப் பார்த்துவிட்டு பிரமிச்சுப் போயிட்டாங்க முகத்தில் சந்தோஷம் பெருக எங்கப்பாவைப் பார்த்து என்னங்க... கணபதியோட கை சரியாயிடுச்சுங்க மடிச்சே வெச்சிருந்த கைய கீழே தொங்க விட்டிருக்கான் பாருங்கன்னு உற்சாகமா சொன்னாங்க.

அப்பாவும் அருகிலே வந்து டேய் கணபதி... கையில இப்ப வலி இருக்காடா? ன்னு கரிசனமா கேட்டார். எதுவும் இல்லப்பான்னு சொல்லிவிட்டு. ஆத்தங்கரையில் இயல்பா விளையாட ஆரம்பிச்சுட்டேன். அப்பாவும் அம்மாவும் என்னைக் கட்டிப் புடிச்சு ஆனந்தப்பட்டாங்க. ஆண்டவரோட கருணைய நினைச்சு மெய்சிலிர்த்துப் போனாங்க எந்த மருந்தாலும் ஆஸ்பத்திரியாலும் குணமாக்க முடியாத ஒரு விஷயத்தை பத்தே செகண்டில் - அதுவும் வீட்டுக்குப் போறதுக்குள்ளேயே குணமாக்கிட்டாரு ஆண்டவர். அதனால்தான் செஞ்சந்தனக்கட்டய இழைச்சுப் போடுன்னு முதலில் சொன்னவர். நாங்க கிளம்புறப்ப எதுவும் வேண்டாம்னு சொன்னாரே...! அவரோட தீர்க்க தரிசனத்தை இப்ப நினைச்சாலும் என் உடம்பு சிலிர்க்குது.

இவன் சமூகத்தில் மேலான இடத்துக்கு வருவான்னு என்னைத் தொட்டு ஆசிர்வாதம் பண்ண ஆண்டவரோட வார்த்தைகளைத்தான் இப்ப நினைச்சுப் பாக்கறேன். அவரது திருவாக்குதான் என்னை உசந்த இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு என்று பரவசப்பட்டார் கணபதி ஸ்தபதி.

முத்துகருப்பய்யா ஆண்டவரின் 74-வது குருபூஜை கடந்த 9.12.2009 அன்று. கொங்கிவயலில் பிரமாதமாக நடந்தது. கார்த்திகை மாத பூர நட்சத்திரன்று தன் உடல் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார் ஆண்டவர். தான் சமாதி நிலையை அடைவதற்கு முன், முத்து ஸ்தபதியைக் கூப்பிட்டு, முத்து.... எனக்கு இங்கேதான் சமாதி வரணும் (தற்போது சமாதி இருக்கும் இடம்). நயினாருக்குப் பின்னால் நான் இருக்குணும் (கோட்டூர் நயினார் கோயிலுக்குப் பின்னால் தன் சமாதி இருக்க வேண்டும் என்கிற பொருளில் அப்படிக் கூறினார்). என் உடலை பதினோரு நாளோ, ஏழு நாளோ, அஞ்சு நாளோ வெச்சிருங்க. அதன் பிறகு அடக்கம் பண்ணுங்க. எவருமே அழக் கூடாது. மேளம், பல்லக்குன்னு ஆடம்பரம் கூடாது என்று சொன்ன ஆண்டவர். இதை அடுத்து ஒரு நாள் பத்மாசனம் இட்டு அமர்ந்தார். கண்களை மூடினார் அது மாலை நேரம் ஆம்! தான் சொன்னபடி. சமாதி நிலையை அடைந்துவிட்டார் அந்தக் கொங்கிவயல் மகான்.

ஆண்டவரின் வாக்குபடி ஐந்து நாட்கள் அவரது திருவுடலை வைத்திருந்தனர். உயிரோடு இருக்கும் ஒருவர் எப்படி இருப்பாரோ, அது போல இயல்பான நிலையில்தான் அவரது திருவுடல் காட்சி அளித்தது. திரளான பக்தர்கள் வந்த ஆண்டவரைத் தரிசித்துவிட்டுப் போனார்கள். அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்து ஏராளமான நகரத்தார்கள் வந்து ஆண்டவரைத் தரிசித்தனர். ஆண்டவரின் அடக்கத்தை விமரிசையாக நடத்த வேண்டும் என்று விருப்பப்பட்ட அன்பர்களுக்கு அவரது திருவாக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின் ஆடம்பரம் இல்லாமல். அமைதியான முறையில் அவரது சமாதி நிகழ்வு நடந்தது. சமாதியை மூடி கருவறை அமைத்தார் முத்து ஸ்தபதி நர்மதை ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட பாணலிங்கத்தை அவரது சமாதியின் மேல் நிறுவினார்கள். பின்னாளில், கருவறையைப் பூர்த்தி செய்து கொடுத்தார். தேவகோட்டையைச் சேர்ந்த சுப்பையா செட்டியார்.

சில காலத்துக்குப் பிறகு. கருவறைக்கு விமானம் எழுப்பினார். முத்து ஸ்தபதியின் மகனான கணபதி ஸ்தபதி கோயில்லுக்கு மண்டபம் எழுப்பினார் கணபதி ஸ்தபதியின் சகோதரான முத்தையா ஸ்தபதி, இரண்டாவது கும்பாபிஷேகத்தையும் முத்து ஸ்தபதியின் குமாரர்கள் நடத்தினர்.

கொங்கிவயல் ஆண்டவரின் திருச்சமாதித் திருக்கோயிலைத் தரிசிப்போம்?

கிழக்குப் பார்த்த திருச்சமாதி கருவறை, அர்த்த மண்டபம். மகா மண்டபம். பிராகாரம். அன்னதானக் கூடம் என்று மிகவும் விஸ்தாரமாகவே இருக்கிறது திருக்கோயில் ஆண்டவரின் அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமான அவரது பக்தர்கள். எந்த ஒரு நல்ல காரியத்தைக் துவங்கும்போதும், கொங்கிவயலுக்கு வந்து, அவரது திருச்சன்னிதி முன் அமர்ந்து பிராத்தித்து விட்டுத்தான் பிற வேலைகளை ஆரம்பிக்கிறார்கள். திருவிழா என்றால், ஆண்டவரது குருபூஜைதான் கார்த்திகை மாதம் பூர நட்சத்திரன்று குருபூஜைதான் கோலாகலமாகக் கொண்டாடப்படும். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருக்கிற அவருடைய பக்தர்கள் அனைவரும் அந்த நாளில் இங்கே திரள்வார்கள். விசேஷ அபிஷேகம், பொங்கல் வைப்பது முடி இறக்குவது, காது குத்துவது, அன்னதானம், மாலையில் வீதி உலா என்று அந்த நாளே திமிலோகப்படும்.
 
மாலையில் ஆண்டவரது உத்ஸவர் விக்கிரகத்தின் வீதி உலா துவங்கும்போது முதலில் கொங்கிவயலில் இருந்து புறப்பட்டு குருநாதரான சாயபுவின் சமாதி இருக்கும் பெரியகாரைக்குத்தான் செல்லும். அதன் பின் அங்கிருந்து புறப்பட்டுப் பல கிராமங்கள் வழியாக இரவுக்குள் கோயில் அடைந்துவிடும். ஆண்டவரின் பேரப் பிள்ளைகளான அழகர்சாமி, சுப்பையா, சண்முகம் - இவர்கள் காலத்தில்தான் இந்த சமாதித் திருக்கோயில் ஓரளவு நல்ல நிலையை அடைந்தது. தற்போது இந்த மூவரின் பிள்ளைகளும் - அதாவது ஆண்டவரின் கொள்ளுப் பேரன்கள் குருபூஜை விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

குருபூஜை தினம் தவிர, ஆண்டவரின் பக்தர்கள் தங்களுக்கு வசதிப்பட்ட நாட்களில் கொங்கிவயல் வந்து அபிஷேகம் செய்து. தங்கள் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தும் காது குத்தியும் பொங்கல் வைத்தும் செல்கிறார்கள். கருவறையில் லிங்கத் திருமேனியாகவும் அதற்கு முன்னால் உத்ஸவர் திருமேனியாகவும் அருள் புரிகிறார் ஆண்டவர் (இந்த உத்ஸவர் திருமேனியை காஞ்சிபுரத்தில் உள்ள தனது சிற்பச் சாலையில் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார் கணபதி ஸ்தபதி) ஆண்டவரின் வாரிசுகளாலும் அவரது பக்தர்களாலும் பல திருப்பணிகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு, இன்று பரிபூரணமாகக் காட்சி அளிக்கிறது சமாதித் திருக்கோயில்.

மகான்களின் அடக்கம் என்பது ஒரு நிகழ்வுதான். அவர்கள் இந்தப் பூவுலகையே விட்டுப் போய்விட்டார்கள் என்பது அதன்  பொருளல்ல. அவ்வளவு ஏன். தான் சமாதி ஆகி ஏழு நாட்களுக்குப் பிறகு இலங்கையில் தரிசனம் கொடுத்திருக்கிறார் முத்துகருப்பய்யா ஆண்டவர். இன்றும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிந்தும் காட்சி தந்தும் காத்து ரட்சிக்கிறார் ஆண்டவர். அவரது திருக்கோயிலைத் தரிசித்து குருவருள் பெறுவோம்!

தகவல் பலகை

தலம்    : கொங்கிவயல்

சிறப்பு    : முத்துகருப்பய்யா ஆண்டவர் சமாதி.

எங்கே இருக்கிறது?: தேவகோட்டை -கல்லல் சாலையில் கோட்டூரை அடுத்து வரும் கிராமம் கொங்கிவயல். தேவகோட்டையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவு. கல்லலில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவு. கோட்டூரில் இருந்து ஒண்ணரை கி.மீ. தொலைவு.

எப்படிச் செல்வது?: தேவகோட்டையில் இருந்தும். கல்லலில் இருந்தும் பேருந்து வசதி இருக்கிறது.

தொடர்புக்கு: 94440 03249.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar