பதிவு செய்த நாள்
28
பிப்
2015
12:02
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், சூரியசக்தியின் மூலம் மின்உற்பத்தி செய்வதற்கான அமைப்பினை நிறுவ, டெண்டர் விடப்பட்டு இருந்தது. இதற்கான டெண்டர் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், சூரியசக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டப்பட்டு, அதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இதில், கோவை மண்டலத்தில், கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. தற்போது முதற்கட்டமாக கோவை மாவட்டத்தில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்கள், ஈரோடு மாவட்டத்தில் 4 கோவில்கள், திருப்பூர் மாவட்டத்தில் 3 கோவில்கள் என மொத்தம் 17 திருக்கோவில்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பு நிறுவப்பட்டு, மின்உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. நேற்று மாசாணியம்மன் கோவிலில் ஒப்பந்த புள்ளிகள் திறப்பு, கோவில் உதவி ஆணையர் கார்த்திக், இந்துசமய அறநிலையத்துறையின், கோவை மண்டல உதவி கோட்டப் பொறியாளர் மதிவாணன் முன்னிலையில் நடந்தது. மொத்தம், 9 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றன. முன்தகுதி ஒப்பந்த புள்ளியானது இருஉறை முறையில் மூடி சீலிடப்பட்ட கவர்கள் திறக்கப்பட்டு தகுதி சான்றுகள் சரிபார்க்கப்பட்டது. இதில் ஒரு நிறுவனம், ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளில் கூறப்பட்டு இருந்த உரிய தகுதி சான்றிதழ் இணைக்காமல் இருந்தது தெரியவந்தது. கோவில் உதவி ஆணையர் கார்த்திக் கூறுகையில், ”ஆறு மாத காலத்திற்குள் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பு கோவிலில் நிறுவப்பட்டு, 10 கே.வி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின்சார வாரியத்திற்கு வழங்கப்படும்,” என்றார்.