நாகர்கோவில் : அய்யா வைகுண்டரின் 183-வது அவதார தினவிழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அவரது தலைமைப்பதி அமைந்துள்ள சுவாமிதோப்புக்கு பேரணி புறப்பட்டு சென்றது. இதையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவரது அவதார தினவிழாவை அய்யா வழி மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அவரது 183-வது அவதார தின விழா நேற்று சுவாமி தோப்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாகர்கோவிலில் இருந்து சுவாமித்தோப்புக்கு பிரமாண்ட பேரணி புறப்பட்டது. குழந்தைகள் கோலாட்டம் ஆடியபடி செல்ல, பதி நிர்வாகிகள் மாலை சூடி செல்ல, காவிக்கொடி ஏந்திய பக்தர்கள் அய்யா, ஹரஹரசிவசிவ என்று பாடியவாறு சென்றனர். கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரை குளம் வழியாக பேரணி சுவாமித்தோப்பை சென்றடைந்தது. குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவையொட்டி குமரி மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வைகுண்டர் பிறந்த நாளில் சுவாமித்தோப்புக்கு நடந்து சென்று அய்யாவை வழிபட்டால் நினைப்பது நிறைவேறும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.