பதிவு செய்த நாள்
07
மார்
2015
12:03
அவிநாசி: பூண்டியில், 50 ஆண்டுகளுக்கு பின், தெப்போற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றானதும், சுந்தரமூர்த்தி நாயனரால் தேவாரம் பாடப்பெற்றுதுமான, திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோவில் மகாமக குளம் மிகவும் பாழடைந்து, கழிவு நீர் தேங்கி வந்தது. திருப்பூர் சைவ சித்தாந்த சபையினர் முயற்சியால், தெப்பக்குளம் சீரமைக்கப்பட்டது.நேற்று முன்தினம் அக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தேர்த்திருவிழா நிகழ்ச்சியாக, தெப்போற்சவ வைபவம் நேற்று நடத்தப்பட்டது. அப்பகுதி மின் விளக்குகளாலும், பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், அம்பிகை உடனமர் சந்திரசேகர பெருமான், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மழை ராகங்களான மேகராக குறிஞ்சி, அமிர்தவர்ஷினி ஆகியவற்றை நாதஸ்வர கலைஞர்கள் வாசிக்க, 9 சுற்றுக்கள் சுவாமி பவனி வந்தார்.அதன்பின், சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சைவ சித்தாந்த சபையினர் தேவராம், திருவாசகத்தை பாராயணம் செய்தனர். குளத்தை சுற்றிலும் திரண்டிருந்த பக்தர்கள், பூக்கள் தூவி வழிபட்டனர்.