பதிவு செய்த நாள்
10
மார்
2015
12:03
சங்ககிரி: சங்ககிரி அருகே, நான்கு ஆண்டாக இழுத்து மூடியிருந்த கோவில், ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை மூலம், திறக்கப்பட்டு, 2 நாள் திருவிழா நடக்கிறது. அதை தொடர்ந்து, வருகிற 18ல், அடுத்த பேச்சுவார்த்தை மூலம், நிரந்தர தீர்வு காணப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி அடுத்த கோட்டவரதம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அன்னமார் கோவில் உள்ளது. இங்கு, பொன்னர்-சங்கர் மூலவராக அருள்பாலித்து வருகிறார். இரு சமூகத்துக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், ஒரு பிரிவினர் பூசாரியாகவும், மற்றொரு பிரிவினர், நிர்வாகத்தையும் கவனித்து வந்துள்ளனர்.கோவிலை வழிநடத்தி செல்வதில், அவர்களுக்குள், 2011ல், பிரச்னை தலைதூக்கியது. அதையடுத்து, இரு பிரிவினரும், கோவிலுக்கு,தனித்தனியே பூட்டுப்போட்டு, இழுத்து மூடிவிட்டனர். அதனால், வழிபாடு கூட செய்ய முடியாமல், ஊருக்குள், அமைதியின்மை நிலவி வந்தது.அதன் எதிரொலியாக, பூசாரிகள் தரப்பில், தொடரப்பட்ட வழக்கு, சங்ககிரி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, கோவில் பகுதியில், யாகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நிர்வாகம் தரப்பில், சங்ககிரி ஆர்.டி.ஓ., பால்பிரின்ஸ்ராஜ்குமாரிடம் மனு கொடுத்தனர்.அதையடுத்து, இரு பிரிவினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு மாதத்துக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையின் போது, கோவில் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில், யாகம் நடத்த, உடன்பாடு ஏற்பட்டது.அதன்படி, கோவில் முன்பாக, யாக, வேள்வி பூஜை, கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் நடந்தது. இதில், "பகைமை மறந்து, பூசாரி மற்றும் நிர்வாக தரப்பினர், ஒரு சேர, பெருமளவில் கலந்து கொண்டனர். அமைதியான முறையில், யாகபூஜை நடத்தி முடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, ஆர்.டி.ஒ., தலைமையில், அடுத்தடுத்து, மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும், நிரந்தர தீர்வு நிபந்தனை முன்வைக்கப்பட்டது.
அதையேற்று, கோவிலை திறந்து, திருவிழா நடத்த, இரு பிரிவினரும் முன்வந்தனர். அதன்படி, நான்கு ஆண்டாக, பூட்டிக்கிடந்த அன்னமார் கோவில், நேற்று மாலை 4 மணியளவில், திறக்கப்பட்டது.ஆர்.டி.ஒ., பால்பிரின்ஸ்ராஜ்குமார் தலைமையில் கோவில் திறக்கப்பட்டது. சங்ககிரி தாசில்தார் செல்வி மற்றும் வருவாய்துறையினர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., ஜெரினாபேகம் தலைமையில் போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பாத்தியப்பட்ட இரு சமூகத்தை சேர்ந்த 1,000க்கும் மேற்பட்டோர், கோவில் திறப்பு நிகழ்ச்சியில், பங்கேற்றனர்.தொடர்ந்து, சிறப்பு பூஜை, பரிவாரங்களுடன், துவங்கிய கோவில் திருவிழா, இன்று இரவு வரை, 2 நாள் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, இரு பிரிவினரும், கூட்டாக செய்துள்ளனர்.ஆர்.டி.ஒ., பால்பிரின்ஸ்ராஜ்குமார் கூறியதாவது:கடந்த, நான்கு ஆண்டாக மூடப்பட்ட கோவில், பேச்சுவார்த்தை மூலம், தீர்வு கண்டு, திறந்து, 2 நாள் திருவிழா நடக்கிறது. விழா முடிந்ததும், வரும், 18ல் நடைபெறும்பேச்சுவார்த்தை மூலம், நிரந்தர தீர்வு காணப்பட உள்ளது. இனி, பிரச்னை எழாத வகையில், நிரந்தர தீர்வு எட்டப்படும். அதையடுத்து, பூசாரி தரப்பில், வழக்கு வாபஸ் பெறப்படும், என்றார்.