பதிவு செய்த நாள்
13
மார்
2015
11:03
சேலம்: சேலம், அஸ்தம்பட்டி பூட்டு முனியப்பன் கோவிலை இடிப்பதற்கு, பொக்லைன் எந்திரத்துடன் வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளின், காலில் விழுந்து பக்தர்கள் மறியல் செய்தனர். இதனால், மனமுறுகிய அதிகாரிகள், தங்களை பணி செய்ய விடாமல் பொதுமக்கள் தடுப்பதாக போலீஸில் புகார் அளிக்க சென்று விட்டனர். சேலம், அஸ்தம்பட்டி, ஏற்காடு மெயின் ரோட்டில், நீதிபதிகள் குடியிருப்பை ஒட்டி உள்ள பூட்டு முனியப்பன் கோவிலை அகற்றுவது தொடர்பாக, கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள், அதிகாரிகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அரசுக்கு சொந்தமான இடத்தில் உள்ள இந்த கோவிலை அகற்ற நீதிமன்றம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.இது குறித்து தகவல் வெளியானதை அடுத்து, நேற்று முன்தினம் இரவே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நள்ளிரவில் அதிகாரிகள் இடித்து விடுவர் என கருதிய பக்தர்கள் அங்கேயே இரவு, பகலாக காவல் காக்கும் பணியில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சேகர் தலைமையில், செயற்பொறியாளர் அருள்அமுதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், டவுன் ஆர்.ஐ., நல்லுசாமி, கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் பொக்லைன் எந்திரத்துடன் கோவிலை அகற்ற வந்தனர்.கோவிலில் முகாமிட்டு இருந்த பொதுமக்கள், நேராக சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். ஆனால், போலீஸ் உதவி கமிஷனர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் பால்பாண்டி ஆகியோர் தலைமையிலான போலீஸார் பொதுமக்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், போலீஸாரின் எதிர்ப்பையும் மீறி, பொக்லைன், அதிகாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர். பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அதிகாரிகள் தங்களின் நிலையில் பின் வாங்கினர். அதை அறிந்த பொதுமக்கள் மீண்டும் கோவிலுக்கு சென்றனர். பின் வாங்குவது போல் நடித்த அதிகாரிகள் மீண்டும் கோவிலை இடிப்பதற்கு பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மீண்டும் பொக்லைன் எந்திரத்தை மறித்ததோடு, அங்கிருந்த அதிகாரிகளின் கால்களில் விழுந்து, கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.பொதுமக்கள் காலில் விழுவதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் பின்னர் மனமிறங்கி, தங்களை பொதுமக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பதாக, போலீஸில் புகார் அளிக்க உள்ளதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.ஆனால், பொதுமக்கள் கோவிலை அதிகாரிகள் எந்நேரம் வேண்டுமானாலும் இடித்து விடக் கூடும் என்ற அச்சத்தில், கோவிலிலேயே முகாமிட்டுள்ளனர். அங்கு பொருட்களை வாங்கி வந்து, சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.பொதுமக்களின் கோவிலை காக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக, சேலம் மாவட்ட இந்து முன்னணியின் செயலாளர் சந்தோஸ்குமார், பா.ஜ., பொதுச் செயலாளர் கோபிநாத் ஆகியோர், கோவிலில் முகாமிட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, இந்த பிரச்சனையை சட்ட ரீதியாக சந்திப்பது குறித்து ஆலோசனை வழங்கினர். இது குறித்து போராட்டத்தை முன்னின்று நடத்தி செல்பவர்களில் ஒருவர் கூறியதாவது: சேலம், பூட்டு முனியப்பன் கோவிலை, நாங்கள் பரம்பரை பரம்பரையாக கும்பிட்டு வருகிறோம். அப்படி இருக்கையில், எங்களின் மத உணர்வுகளை தூண்டும் வகையில், சில அதிகாரிகள் தங்களின் சுயநலனுக்காக இது போன்று கோவிலை இடிக்க முயற்சிப்பதை எங்களால் அனுமதிக்க முடியாது.முதல் கட்டமாக கோவிலை இடிக்க விடாமல் தடுத்துள்ளோம். அடுத்த கட்டமாக இதற்கு சட்ட ரீதியாக தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுவோம், என்றார்.